

கோவை - சத்தி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க டெக்ஸ்டூல் பாலம் அருகே சாலை அகலப்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்துள்ள முக்கிய மாநகரங்களில் ஒன்றான கோவையில், தனி நபர் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தேவையான இடங்களில் மேம்பாலங்கள் கட்டுதல், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்தல், சாலைகளை விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, அவிநாசி சாலை, உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணி நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல், மாநகரில் நெரிசல் மிகுந்த சாலைகளில் முக்கியமானதாக கோவை - சத்தி சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள சரவணம்பட்டி மற்றும் அதை மையப்படுத்தி ஏராளமான ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும், பல தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சத்தி சாலையில் உள்ள கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு செல்ல பெரும்பாலானோர் வாகனங்களை பயன்படுத்துவதால் கோவை - சத்தி சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக, காந்திபுரத்தில் இருந்து டெக்ஸ்டூல் பாலம், கணபதி பேருந்து நிலையம், மணியகாரம்பாளையம் பிரிவு, சங்கனூர் பிரிவு உள்ளிட்டவற்றை கடந்து செல்வதற்குள் வாகன ஓட்டுநர்கள் தவிப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
சாலையோர ஆக்கிரமிப்புகள், சாலைகள் குறுகலாக இருப்பது போன்றவையே வாகன நெரிசலுக்கு மற்றொரு முக்கிய காரணமாகும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சத்தி சாலையில் குறிப்பிட்ட இடங்களில் சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவை - சத்தி சாலையில் டெக்ஸ்டூல் பாலம் முதல் பழைய சத்தி சாலை வரை 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறமும் தலா 3 மீட்டர் தூரத்துக்கு அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. நிலம் கையகப்படுத்த ரூ.38 கோடியே 65 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிலம் வழங்க நில உரிமையாளர்கள் 60 பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அனுமதி கிடைத்ததும் நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் தொடங்கும்,’’ என்றனர்.