

சதானந்த கவுடாவை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலை வர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கை: காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் கர்நாடக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட கர்நாடகாவில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் அரசியல் அமைப்புச் சட்டத்தை குழி தோண்டி புதைப்பதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல.
மத்திய அமைச்சர் சதானந்த கவுடா சட்டத்துக்கு புறம்பாகவும் மத்திய அமைச்சரவை முடிவுக்கு எதிராகவும் செயல்படுவதால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் உடனடியாக நீக்க வேண்டும்.
கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட லாரி, பேருந்து உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இக்கோரிக்கையை வலி யுறுத்தி சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு வரும் 5-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இதில் விவசாயிகள் பெருமளவில் கலந்துகொள்ள உள்ளனர் என்றார்.