

சென்னை: ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினம் கடைபிடிக்கப்படும். அதன்படி இன்று நடைபெறும் 383-ம் ஆண்டு சென்னை தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பழமை வாய்ந்த மிதிவண்டி கண்காட்சி நேற்று நடைபெற்றது.
சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்த கண்காட்சியை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை செயலர் சந்தரமோகன், சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது, அவர்கள் ‘குளோபல் ஹெரிடேஜ் ஆப் மெட்ராஸ்’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டனர். இந்த கண்காட்சியில் 1800-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
மேலும், பல்வேறு பழமை வாய்ந்த மிதிவண்டி முகப்பு விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. முன்பாக, காலை 5 முதல் 8 வரை சைக்கிளிங் நடைபெற்றது. தொடர்ந்து மிதிவண்டி கண்காட்சியும், மாலை 4 முதல் 6 வரை பாரம்பரிய உணவு நடைபயணமும் நடைபெற்றன.