

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக, பெரும்புதூர் வட்டத்தில் உள்ள ஏகனாபுரம் உட்பட 12-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4,500 ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.
மேலும், புதிய விமான நிலைய திட்டத்துக்காக இந்த கிராமங்களில் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களில் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களாக உள்ளன. இதனால், விமான நிலைய திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த இந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதில், ஏகனாபுரம் மக்கள் தங்களின் குடியிருப்பு நிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 8-ம் தேதி ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
இந்நிலையில், விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி ஏந்தி கிராமப் பகுதியில் பேரணியாக சென்று கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கோரிக்கை குறித்து ஆட்சியரிடம் தெரிவிக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.