Last Updated : 22 Oct, 2016 10:09 AM

 

Published : 22 Oct 2016 10:09 AM
Last Updated : 22 Oct 2016 10:09 AM

முருகன் கோயிலில் முஸ்லிம் புலவருக்கு சிலை: மத நல்லிணக்கத்துக்கு சான்றாக விளங்கும் மேலக்கொடுமலூர்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலக்கொடுமலூர் முருகன் கோயிலில் முஸ்லிம் புலவருக்கு சிலை வைத்துள்ளது மத நல்லிணத்துக்குச் சான்றாக விளங்குகிறது.

பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் எனும் சிற்றூரில் 1745-ம் ஆண்டு பிறந்தவர் முஹம் மது மீர் ஜவாது புலவர். இவர், முகையதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத் தந்தாதி, ராஜராஜேஸ்வரி பஞ்சரத்ன மாலை, வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள், சித்திரக் கவிகள், மாலை மாற்றுகள், குமரையா பதி கங்களைப் பாடியுள்ளார். மேலும் ரகுநாத சேதுபதி, பிரம்பூர் ஆனந்த ரங்கதுரை, முத்துகிருஷ்ணன், கச்சி செல்லப்பன் உள்ளிட்ட வள் ளல்களையும் பாடிச் சிறப்பு செய் துள்ளார். ஜவாது புலவரின் முகையதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ் இன்றளவும் தமிழக முஸ்லிம் களின் தாலாட்டுப் பாடல்களாக வாய்மொழியாகப் பாடப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி என்று புகழ்பெற்ற செல்ல முத்து ரகுநாத சேதுபதி மன்னரின் அரசவைக் கவிஞராகவும், அரசியல் ஆலோசகராகவும் திகழ்ந்தவர். இவருக்கு சேதுபதி மன்னர் பரமக் குடி அருகே சுவாத்தன், வண்ண வயல் ஆகிய இரண்டு கிராமங் களை நிலக்கொடையாக வழங்கிய தற்குச் செப்பேடுகள் உள்ளன.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூரில் உள்ள குமரக்கடவுள் என்ற சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு ஜவாது புலவர் பல பதிகங்களைப் பாடியுள்ளார். இதற்காக புலவரை கவுரவப்படுத்தும் விதமாக, கோயி லின் விமானத்தில் அவரது சிலையை சுதை வடிவில் அமைத்துள்ளது சமய நல்லிணக்கத்துக்குச் சான் றாக விளங்குகிறது.

இதுகுறித்து குமரக்கடவுள் கோயிலின் அறங்காவலர் ஆனந்த நடராஜன் கூறியதாவது:

மேலக்கொடுமலூர் என்றால் ‘வலிமைமிக்க மழு ஆயுதம் தாங்கி மேற்கு திசை நோக்கி நிற் கின்றவனின் ஊர்’ என்று அர்த்தம். அதாவது முருகப் பெருமான் அசுரனை மழு என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தால் அழித்துவிட்டு திரும் பும்போது, அங்கிருந்த முனிவர்கள் முருகனைக் கண்டுவணங்கினர். அந்த இடத்திலேயே (மேற்கு திசையில்) முருகன் நின்று அருளாசி வழங்கினார் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலக்கொடுமழுர் என்பது காலப் போக்கில் மருவி மேலக்கொடுமலூர் என மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த தலத்தைப் பற்றி ஜவாது புலவர், பாம்பன் சுவாமிகள், திருவேகம்பத்தூர் கவிராஜ பண்டி தர் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோயில் எழுப்பினார் ராமநாதபுரம் சேதுபதி மன்னர். 1926-ம் ஆண்டில் முதன்முறையாக இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடந்த 2004-ம் ஆண்டு கோயி லில் நடைபெற்ற கும்பாபிஷேகத் தின்போது, ஜவாது புலவரை கவுரவிக்கும்விதமாக அவர் பாடிய குமரையா பதிகத்தை மதில் சுவரில் கல்வெட்டாகப் பதித்து கோயிலின் விமானத்தின் தெற்குப் பகுதியில் ஜவாது புலவரின் உருவத்தைச் சுதை வடிவில் அமைத்தோம்.

இக்கோயிலில் சூரியன் மேற்கே மறைந்த பிறகே இரவு நேரத்தில் 33 அபிஷேகங்கள் நடைபெறும். ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரத் திருவிழாவின்போது நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அந்த சமயங்களில் முஸ்லிம் பக்தர் களும் வருவது உண்டு என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x