Published : 22 Aug 2022 06:50 AM
Last Updated : 22 Aug 2022 06:50 AM

சிறுவாபுரி முருகன் கோயிலில் குடமுழுக்கு: மத்திய இணை அமைச்சர், தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

பொன்னேரி: பொன்னேரி அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சா.மு.நாசர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே சிறுவாபுரி கிராமத்தில் பிரசித்திப் பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு, கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு, கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, ரூ.1.10 கோடி மதிப்பில் ராஜகோபுரம், மூலவர், அம்பாள் சந்நிதிகளின் விமானங்கள், அண்ணாமலையார் மற்றும் விநாயகர் சந்நிதி உள்ளிட்டவற்றை புதுப்பிக்கும் திருப்பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்தன. அப்பணிகள், சமீபத்தில் முடிவுக்கு வந்தன.

இதையடுத்து, கடந்த 17-ம் தேதி அனுக்ஞை, கோ பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்டவையுடன், மஹா கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதில், நேற்று காலை 9 மணி வரை, ஆறு கால யாக பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன.

குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தர்கள்.

தொடர்ந்து, யாக சாலைகளில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள், மேள தாளங்கள் முழங்க ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் திருக்கல்யாண உற்சவமும், அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

19 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகன், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், துரை.சந்திரசேகர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இந்து சமய அறநிலையத் துறை (வேலூர்) இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் சித்ரா தேவி உள்ளிட்ட அதிகாரிகள், வெளியூர் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த கும்பாபிஷேக விழாவுக்கு, திருவள்ளூர் எஸ்பி சீபாஸ் கல்யாண் மேற்பார்வையில், 400-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல், கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அன்னதானம் வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x