மங்களூரூ - சென்னை ரயில் ஆவடியில் நிறுத்தம்: மத்திய இணையமைச்சர் முரளிதரன் தொடங்கி வைத்தார்
சென்னை: மங்களூரூ-சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலின் ஆவடி நிறுத்த சேவையை மத்திய வெளியுறவு துறை இணையமைச்சர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.
ஆவடி மாநகராட்சியில் மத்திய அரசின் பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிக்கும் எச்விஎஃப், ஓசிஎஃப் உள்ளிட்ட தொழிற்சாலைகளும், விமானப்படை, மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பயிற்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
இத்தொழிற்சாலைகள் மற்றும்பயிற்சி மையங்களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல சென்னை சென்ட்ரல் நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து விரைவு ரயில்களில் செல்கின்றனர்.
அதேபோல், திரும்பி வரும்போது அரக்கோணம் அல்லதுபெரம்பூர், சென்னை சென்ட்ரலுக்குசென்று இறங்கி, பின்னர் மீண்டும்அங்கிருந்து மின்சார ரயில் ஏறி ஆவடி வருகின்றனர். இதனால், பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, பயணிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் மெயில், ஆலப்புழா விரைவு ரயில் ஆகியவை ஆவடியில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் நின்று செல்கின்றன. இவ்விருரயில்களும் கேரளாவின் தெற்கு பகுதியில் உள்ள ஊர்கள் வழியாக செல்வதால் அங்கிருந்து வரும் பயணிகளுக்கு வசதியாக உள்ளது.
அதே சமயம், கேரளாவின் வடக்குப் பகுதியில் உள்ள கோழிக்கோடு, வடகரா, தலசேரி, கன்னூர்,காசர்கோடு பகுதிகள் வழியாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்கள் ஆவடியில் நிற்காததால், இவற்றில் வரும் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதையடுத்து, சென்னை சென்ட்ரல்-மங்களூரூ ரயிலை ஆவடியில் நிறுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்தது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல்-மங்களூரூ விரைவு ரயிலுக்கு (வண்டி எண். 12685/86), ரயில்வேவாரியம் ஆவடியில் 6 மாத காலத்துக்கு பரீட்சார்த்த அடிப்படையில் நிறுத்தம் வழங்கியுள்ளது. இதையடுத்து, மங்களூரு-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் நேற்று (21-ம் தேதி) முதல் ஆவடியில் நின்று செல்கிறது.
இதற்காக ஆவடி ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்த ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஆவடி நகரில் பல பாதுகாப்புத் துறை பொதுத் துறை தொழிற்சாலைகள் உள்ளன. அத்துடன், சென்னையின் முக்கிய பொருளாதார மையமாகவும் திகழ்கிறது.
பிரதமர் மோடியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் ரயில்வே துறை அபரிமித வளர்ச்சியை அடைந்து வருகிறது. 2021-22-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மிக அதிகபட்சமாக தமிழகத்துக்கு 3,730 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது 2009-14-ம் ஆண்டு தாக்கல்செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட 324 சதவீதம் அதிகமாகும்.
ரயில் விபத்துகளை தடுப்பதற்காக உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் ‘கவச்’ என்ற பாதுகாப்புக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கருவியின் மூலம் 2 ஆயிரம் கிமீ ரயில் பாதையில் விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு முரளிதரன் கூறினார்.
நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: இந்திய ரயில்வேயை உலகத் தரத்தில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேற்கொண்டுள்ளார். திண்டிவனம்-செஞ்சி, திருவாலங்காடு-திண்டிவனம்-நகரி, அத்திப்பட்டு-புத்தூர்,ஈரோடு-பழனி, சென்னை-கடலூர்,மதுரை-தூத்துக்குடி, இருங்காட்டுக் கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், ஆவடி வழியாக மொரப்பூர், தருமபுரி உள்ளிட்ட 8 ரயில் பாதைதிட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
வாஞ்சிமணியாச்சி-நாகர்கோவில் ரயில் திட்டம் ரூ.750 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில், பயணி வசதிகள் குழுத் தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ், சென்னை மண்டல ரயில்வே மேலாளர் கணேஷ், பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேசமயம், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத் துறை அமைச்சருமான சா.மு.நாசர்,ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்கவில்லை.
இதற்கிடையே, மங்களூர் ரயிலுக்கு ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கியிருப்பதன் மூலம்,தங்களது 20 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியுள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் ‘கவச்’ என்ற பாதுகாப்புக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கருவியின் மூலம் 2 ஆயிரம் கிமீ ரயில் பாதையில் விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளன.
