திருப்பரங்குன்றம் தேர்தல் திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பு

திருப்பரங்குன்றம் தேர்தல் திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பு
Updated on
2 min read

திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம் மதுரை மாவட்டம் வலை யங்குளத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு மதுரை தெற்கு மாவட்ட செயலர் மணிமாறன் தலைமை வகித்தார். இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தலை சந்திக்கிறோம். தமிழகத்தையே திருப்பிப்போடும் குன்றமாக திருப்பரங்குன்றம் விளங்க வேண்டும்.

திமுக எத்தனையோ தேர்தல் களங்களில் ஈடுபட்டுள்ளது. அண்ணா மறைவுக்கு பின் 1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 184 இடங்கள் பெற்று ஆட்சிக்கு வந்தது. அதேபோல அதிக இடங்கள் பெற்று எதிர்க்கட்சியாக வந்ததும் திமுக தான். ஆட்சிக்கு வரமுடியவில்லை என ஒருபோதும் கவலைப்பட்டதில்லை.

கடந்த 5 மாதங்களில் சிறுவாணி, காவிரி போன்ற மக்கள் பிரச்சினைகளை சட்டப் பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறோம்.

கர்நாடகாவில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து மக்கள் பிரச்சினைக்காகப் போராடுகின்றன. காவிரி பிரச்சினை குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் மனு கொடுத்தோம். அவர்கள் கூட்டம் கூட்டாததால் நாங்களே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினோம்.

அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த திமுகவுக்கு என்ன தகுதியுள்ளது எனக் கேட்கும் பாஜகதான் தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க மாட்டோம் எனக் கூறுகிறது. ஆனால், ஜல்லிக் கட்டு நடத்தக் கூடாது என உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டபோது அதை ஏன் மறுக்கவில்லை என்றார்.

இதில் துணை பொதுச் செயலர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்.முத்துராமலிங்கம், பெரியகருப்பன், மாநில இளைஞர் அணி துணைச் செயலர் எஸ்.ஜோயல், மாவட்டச் செயலர்கள் வேலுச்சாமி, மூர்த்தி, தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வந்த ஸ்டாலின்

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு மதுரை வந்தார். பாண்டிகோவில் சாலையில் உள்ள ஹோட்டலில் தங்கினார். பொதுவாக வெளியூரில் தங்கும்போது, அவர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். மதுரையில் தங்கினால் ரேஸ்கோர்ஸ் மைதானம் பகுதியில் அவர் நடைபயிற்சி மேற்கொள்வார்.

இம்முறை திமுக மதுரை மேற்கு மாவட்ட செயலர் கோ.தளபதி உட்பட கட்சி நிர்வாகிகளுடன் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி இருக்கும் நான்கு சித்திரை வீதிகளில் காலை 6.20 மணி முதல் 7.30 மணி வரைஅவர் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது கோயிலை சுற்றி மூன்று முறை ஸ்டாலின் வலம்வந்தார். திடீரென ஸ்டாலினை அங்கு பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருடன் சேர்ந்து பொதுமக்களில் சிலர் செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in