Published : 22 Aug 2022 04:15 AM
Last Updated : 22 Aug 2022 04:15 AM

கள்ளக்குறிச்சியில் 4,500 பட்டியலின குடும்பத்தினருக்கு இ-பட்டா: 35 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 35 ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், 4,500 பட்டியலின குடும்பத்தினருக்கு இ-பட்டா வழங்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்த போதே, 35 ஆண்டுகளுக்கு முன்பு, வீடு இல்லாத பட்டியலின மக்களுக்கு அரசு சார்பில் வீட்டு மனை ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கவில்லை. இதனால் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றவர்கள், பட்டா இன்றி வீடு கட்டி வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆதி திராவிடர் மற்றும்பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது தொடர்பான பட்டியலை, இணைய தளத்தில் பதிவேற்றும்படி, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இ-பட்டா வழங்க முடிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு, அந்தந்த வட்டாட்சியர் தலைமையில் குழுஅமைத்து, அரசின் வீட்டுமனைப் பட்டா ஒதுக்கீடு பெற்றவர்களின் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டார். வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் களை பட்டா ஒதுக்கீடு பகுதியில் நேரடி கள ஆய்வுசெய்து, வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றவர்களைஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

அந்த வகையில் மாவட்டத்தில் அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா ஒதுக்கீடு பெற்றவர்கள் சுமார் 5,000 பேர் கண்டறியப்பட்டனர். அவை உடனுக்குடன், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை 4,500 பேருக்கு அரசின் இ-பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் 500 பேர் குறித்த நேரடி கள ஆய்வு நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் எஞ்சியவர்களுக்கு இ.பட்டா வழங்கப்படும். கடந்த 35 ஆண்டு களுக்கு மேலாக நிலவி வந்த இந்த பிரச்சினைக்கு ஆட்சியரின் நடவடிக்கையால் தற்போது தீர்வு கிடைத்துள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் 500 பேர் குறித்த நேரடி கள ஆய்வு நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x