சிப்பெட் நிறுவனம் சென்னையிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

சிப்பெட் நிறுவனம் சென்னையிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்
Updated on
1 min read

சிப்பெட் நிறுவனத்தின் தலைமையிடம் சென்னையிலேயே செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட் (CIPET) சென்னையில் 1968 முதல் சிறப்பாக இயங்கி வருகிறது. மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். 28 கிளைகள் இந்த நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டதாகும்.

பிளாஸ்டிக்ஸ் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் ஆராய்ச்சி வாயிலாகவும், உற்பத்தி வாயிலாகவும் நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உரிய பங்கினை ஆற்றி வருகிறது.

சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள இந்நிறுவனம் பிளாஸ்டிக் துறையில் பல சாதனைகளை புரிந்து வருவதோடு மட்டுமல்லாமல், இது சம்பந்தமான கல்வியை போதிப்பதிலும் மத்திய அரசின் உதவியுடன் நடத்தப்படும் பல்வேறு உயர்தொழில் நிறுவனங்களுக்கு இணையாகவும் விளங்கி, உலகத்தரம் வாய்ந்த பிளாஸ்டிக் கல்வி போதிக்கும் நிறுவனங்களுக்கு மற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள தலைசிறந்த மையங்களுக்கு முன்மாதிரி நிறுவனமாகவும் விளங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், லாபம் ஈட்டும் பொதுத்துறையாக சிறந்து விளங்குவதற்கும் தொழிலாளர்களின் அயராத உழைப்பு முக்கிய காரணமாகும். தொழிலாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட நிதி தேவைகளை அந்த நிறுவனமே பூர்த்தி செய்து கொள்கிறது. கட்டடம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்கு மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது.

இப்படிப்பட்ட பொதுத்துறை நிறுவனத்தின் தலைமையகத்தை சென்னையிலிருந்து டெல்லிக்கு இரண்டு மாதத்திற்குள் மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே இப்படிப்பட்ட ஒரு முயற்சி 1999-ல் நடைபெற்றபோது அது தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆனால், மீண்டும் அப்படிப்பட்ட ஒரு முயற்சியை மத்திய பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு, மத்திய பிளாஸ்டிக்ஸ் பொறியியல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் தலைமையிடம் சென்னையிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in