Published : 18 Jun 2014 11:15 AM
Last Updated : 18 Jun 2014 11:15 AM

மின்வெட்டுப் பிரச்சினையில் முதல்வர் பொதுவாக்கெடுப்புக்கு தயாரா?- ராமதாஸ்

தமிழகத்தை ஒளிமயமான மாநிலமாக்கி விட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா கருதுவாரேயானால், அதையே மக்கள் மன்றத்தில் முன் வைத்து பொது வாக்கெடுப்பு நடத்தவும், அதில் மக்கள் அளிக்கும் தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்ளவும் தயாரா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் மின்வெட்டு அடியோடு ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், ஜூன் 3 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது.

இதை சுட்டிக்காட்டி கடந்த 7-ம் தேதி அறிக்கை வெளியிட்ட நான், மின்வெட்டை போக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியிருந்தேன்.

இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்றும், அல்லும் பகலும் பாடுபடும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பகீரத முயற்சியால் இருளில் மூழ்கியிருந்த தமிழகம் வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக கூறியிருந்தார்.

தமிழக மின்திட்டங்கள் தொடர்பாக 10 வினாக்களை எழுப்பியிருந்தேன். அவற்றுக்கு 6 நாட்களுக்குப் பிறகு அமைச்சர் பதிலளித்துள்ளார். எனது வினாக்களுக்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பள்ளி மாணவன் போல் பதில் அளித்துள்ளார். பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரே மாதிரியாக பதிலளித்துள்ளார்.

இதன் மூலம் தமிழக அரசு அறிவித்த மின்திட்டங்கள் எதற்குமே கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை; அனைத்து திட்டங்களுமே அனுமதி பெறும் நிலையிலும், ஆய்வு நிலையிலும் தான் உள்ளன என்பதை மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

2007ஆம் ஆண்டு முதல் நிலவி வந்த மின்வெட்டை 3 ஆண்டுகளில் சீர்செய்து, மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகத்தை ஜெயலலிதா மாற்றியிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தான் நான் அரசை விமர்சிப்பதாகவும் அமைச்சர் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் தற்போது மின்வெட்டே இல்லை என்பதன் மூலம் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்துள்ளார்.

தலைமைச்செயலகத்திலும், அமைச்சர்களுக்கான மாளிகையிலும் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு ஜெயா தொலைக்காட்சியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், தமிழகம் ஒளிர்வது போன்றும், அதை பொதுமக்களும், விவசாயிகளும், தொழில் முனைவோரும் பாராட்டுவது போன்றும் தான் தோன்றும்.

அமைச்சராக இருக்கும் விஸ்வநாதன் போன்றவர்கள் தங்களைச் சுற்றி அமைத்துக் கொண்டிருக்கும் வளையத்தைத் தாண்டி வெளியில் வந்தால் தான் ஜூன் 1 ஆம் தேதிக்குப் பிறகு மின்வெட்டால் மக்கள் எந்த அளவுக்கு அவதிப்படுகிறார்கள் என்பதும், மின்வெட்டை அவ்வளவாக அனுபவிக்காத சென்னையில் இரவு நேரத்திலும் மின்வெட்டு நீடிப்பதால் ஆத்திரமடைந்த மக்கள் மின்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதும் தெரியும்.

ஏற்கனவே கூறியதைப்போல இந்தப் பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மாறாக, தமிழகத்தின் மின்வெட்டை நீக்க முதலமைச்சரும், மின்துறை அமைச்சரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை மட்டுமே நான் சுட்டிக்காட்டினேன்.

இந்த விஷயத்தில் எது சரி என்பதை இனி தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்கள் தான். இதன்பிறகும் மின்வெட்டை போக்கி தமிழகத்தை ஒளிமயமான மாநிலமாக்கி விட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா கருதுவாரேயானால், அதையே மக்கள் மன்றத்தில் முன் வைத்து பொது வாக்கெடுப்பு நடத்தவும், அதில் மக்கள் அளிக்கும் தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்ளவும் தயாரா? என்று சவால் விடுக்கிறேன்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x