

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:
மேற்கு மத்திய வங்கக் கடல் அதையொட்டிய வடக்கு ஆந்திரா கடற்கரையோரத்தில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியிருக்கிறது. இது சென்னையில் இருந்து 800 கி.மீ. தொலைவில் உருவாகி யிருப்பதால் தமிழகத்துக்கு தற்போது தாக்கம் எதுவுமில்லை. இருப்பினும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழையோ இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் சில பகுதிகளில் மழையோ இடியுடன்கூடிய மழையோ பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சமயபுரம், புள்ளம்பாடியில் தலா 110 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சாத்தனூர் அணையில் 90 மி.மீ., மன்னார்குடி, பாபநாசத்தில் தலா 80 மி.மீ., குடவாசல், திருக்காட்டுப்பள்ளி, லால்குடி, வலங்கைமான், கள்ளக்குறிச்சியில் தலா 66 மி.மீ., தஞ்சாவூரில் 50 மி.மீ., உளுந்தூர்பேட்டையில் 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஆலங்குடி, திருச்சி நகர், விருத்தாசலம், அறந்தாங்கி, திருமானூர், ஒரத்தநாடு, மரக்காணம் ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ., திருவையாறு, திருவண்ணாமலை, மருங்காபுரி, கும்பகோணத்தில் 20 மி.மீ., ஆகிய பகுதிகளில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.