

சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை தேர்வு செய்து, அவர்களை சிறப்பிக்கும் வகையில் பெரியார் விருது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியும், ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் பெரியார் விருதுக்கு தகுதியானவர் தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக மேற்கொண்ட முயற்சிகள், அம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொண்ட பணிகள், கடந்த ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும்.
இந்த விவரங்களுடன் பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரி யுடன் நவம்பர் 10-ம் தேதிக்குள், ‘மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்’ என்ற முக வரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.