காவிரி பிரச்சினை: மத்திய அரசைக் கண்டித்து அக்.7-ல் மநகூ ஆர்ப்பாட்டம்

காவிரி பிரச்சினை: மத்திய அரசைக் கண்டித்து அக்.7-ல் மநகூ ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசினை கண்டித்து மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பில் திருவாரூரில் வரும் 7-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதன் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொல்கிற அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இது கற்பனை செய்ய முடியாத பெருங்கேட்டையும், தீமையையும் தமிழகத்துக்கு இழைத்துவிடும். தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட 16 மாவட்டங்களுக்குக் குடிநீர் இல்லாமலும், டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தை அடியோடு பறிகொடுக்கும் நிலைமையும் ஏற்பட உள்ளது.

காயப்பட்ட இதயத்தில் சூட்டுக்கோலைத் திணிப்பது போல் மேகதாது, ராசிமணல் அணைகளைக் கட்டுவதற்கும் கர்நாடக அரசை மத்திய அரசு மறைமுகமாக ஊக்குவித்து வருகின்றது. எனவே, மத்திய அரசை எதிர்த்து, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும்.

மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நலக்கூட்டு இயக்கத்தின் சார்பில் டெல்டா மாவட்டங்களில் வரும் 7-ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. திருவாரூரில் வரும் 7-ம் தேதி நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் நான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்கவுள்ளோம்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in