Published : 24 Oct 2016 09:35 AM
Last Updated : 24 Oct 2016 09:35 AM

தமிழகத்தில் முழுநேர ஆளுநராகிறார் வித்யாசாகர் ராவ்? - விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகத்துக்கு முழுநேர ஆளுநராக நியமிக்கப் படலாம் என தெரிகிறது.

தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யா பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தமிழக ஆளுநராக பலரது பெயர் அடிப்பட்டாலும், புதியவர் நியமிக்கப்படும்வரை, மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கூடுதல் பொறுப்பாக தமிழகம் வழங்கப்பட்டது. அவர் தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.

தற்போது இவரையே தமிழகத் துக்கு முழுநேர ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, குஜராத் முதல்வராக இருந்த ஆனந்தி பென் படேல் தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் பரவியது. அதன் பின் தமிழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த பாஜ மூத்த தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தியை ஆளுநராக நியமிக்க முயற்சி நடந்தது.

ஏற்கெனவே, தமிழகம்- கர்நாடகம் இடையே காவிரி விவகாரத்தில் பிரச்சினை இருப்பதால், இந்த முடிவை மத்திய அரசு கைவிட்டது. உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரியின் பெயரும் தமிழக ஆளுநர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் பின், அம்மாநில தேர்தலை கருத்தில் கொண்டு அந்த முடிவும் தள்ளிப்போனது. அதன்பின்தான், பொறுப்பு ஆளுநராக ஆந்திராவைச் சேர்ந்த வித்யாசாகர் ராவை நியமித்தது.

இந்நிலையில்தான் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டார். மருத்துவமனைக்கு சென்ற ஆளுநர், முதல்வர் உடல் நலம் தொடர்பாக விசாரித்து அறிந்தார். அதன் பின், முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த துறைகளை, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளிப்ப தாக அறிவித்தார். அமைச்சரவை கூட்டத்துக்கும் அவரையே தலை வராக அறிவித்தார்.

தமிழகத்தில் அரசு நிர்வாகம் தொடர்பான விவரங்களை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் தெரிவித்தார். தொடர்ந்து, இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் மீண்டும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதல்வர் உடல் நலம் தொடர்பாக விசாரித்து அறிந்தார்.

இந்நிலையில், தமிழகத்தின் முழுநேர ஆளுநராக வித்யாசாகர் ராவையே நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு பதில் மகாராஷ் டிராவுக்கு கர்நாடகாவைச் சேர்ந்த சங்கரமூர்த்தியை நியமிக்கவும், கேரள ஆளுநராக உள்ள சதாசிவத்தை, ஆந்திர ஆளுநராகவும், கேரளாவுக்கு ஆனந்தி பென் படேல் அல்லது வேறு யாராவது ஒருவரை நியமிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம் என பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x