Published : 21 Aug 2022 06:30 PM
Last Updated : 21 Aug 2022 06:30 PM

கரோனாவுக்கு பிறகு வரும் விநாயகர் சதூர்த்தி: 2 ஆண்டு ஸ்டாக்கில் இருந்த சிலைகள் விற்பனை

மதுரை: கரோனாவுக்குப் பிறகு வழக்கமான ஆரவாரத்துடன் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டத்திற்காக தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் தயார் செய்து வருகின்றனர்.

இந்துகள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதூர்த்தி விழா முக்கியமானது. இந்த ஆண்டு வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ‘கரோனா’ தொற்று ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டாக ஆட்டம், பாட்டம், ஊர்வலத்துடன் கொண்டாடப்படும் விநாயகர் சதூர்த்தி விழா தடை ஏற்பட்டது.

வழக்கமான கொண்டாட்டம் இல்லாமலேயே இந்த விழா நடந்தது. வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து எளிமையாக மக்கள் கொண்டாடினர். அதனால், கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டத்திற்காக தயார் செய்த சிலைகள் விற்பனையாகாமலே முடங்கியது. இந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வாழ்வாதாரத்தை இழந்தனர்.

தற்போது ‘கரோனா’ கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் வழக்கமான ஆரவாரத்துடன் இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்கள். இதற்காக மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதூர்த்தி சிலைகளை தயார் செய்யும் பணி நடக்கிறது. தொழிலாளர்கள் குழுவாக தயார் செய்த சிலைகளுக்கு வர்ணம் பூசும் இறுதிக்கட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் சதூர்த்தி விழாவில் குடியிருப்புப் பகுதிகள், வீடுகள், பொதுஇடங்களில் வைக்கப்படும் பலவிதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்று முதல் 10 நாட்கள் வரை பூஜை செய்து, நீர்நிலைகளில் விஜர்சனம் செய்வது வழக்கம். அதனால், தற்போதே நகரப்பகுதிகளில் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் சிலைகளை வாங்கத் தொடங்கிவிட்டனர்.

மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஏராளமான தொழிலாளர்கள தங்களது குடும்பத்துடன் தங்கியிருந்து விநாயகர் சிலை தயாரிப்பு, விற்பனைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் மதுரை மாவட்டத்தில் மட்டுமில்லாது சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, தேனி போன்ற பகுதிகளில் இருந்தும் மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

சிலை தயாரிப்பு தொழிலாளர்கள் கூறியதாவது: ''கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கால் பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அனுமதி இல்லை. அதற்காக விதவிதமான சிலைகள் தயாரித்து வைத்திருந்தோம். அவை விற்பனையாகாமல் உள்ளன. அப்படி ஸ்டாக் வைத்திருக்கும் சிலைகள் எந்த சேதமும் இல்லாமல் உள்ளன.

அதனால், அவற்றை முதலில் விற்பனை செய்து வருகிறோம். அதன்பிறகு ஆர்டர் கொடுப்போர் விரும்பிய மாடல்களிலும் சிலைகள் தயார் செய்கிறோம். கடந்த 2 ஆண்டாக பெரும் நஷ்டத்தை சந்தித்தத்தால் மாறுபாடான வடிவங்களில் சிலைகளை தயார் செய்யவில்லை. வழக்கமான வடிவங்களிலேயே சிறிய அளவில் தயார் செய்கிறோம்.

ஒரு அடி முதல் 15 அடி வரையிலான சிலைகள் விற்பனை செய்கிறோம். இந்த சிலைகள் ரூ.50 முதல் ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். கடந்த காலங்களை போல் தற்போது பெரியளவிற்கு விற்பனை இல்லை. விநாயகர், மயில், சிங்கம், மான், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அமர்ந்திருக்கக்கூடிய சிலைகளை பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்.'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x