

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் இன்று சென்னை வருகின்றனர்.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் சென்னை ஆயிரம்விளக்கு அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப் பட்டுள்ளார். நுரையீரல் தொற்று காரணமாக அவருக்குச் செயற்கை சுவாசத்துடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கேரள ஆளுநர் சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்து சென்றனர்.
இந்நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.