

தீபாவளி என்கிற பெயரில் காற்று மாசு ஏற்படுத்துவதா என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மனித குலத்தை புராண காலத்துக்கு அழைத்துச் சென்று அறியாமையெனும் காரிருளில் தள்ளும் பண்டிகை தான் தீபாவளி. இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.358 கோடி அளவுக்கு டாஸ்மாக் மது வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த மது வகைகளை குடித்தவர்கள் அனைவரும் பெரும்பணக்காரர் அல்ல. சாதாரன ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள். பட்டாசுகளால் தீ விபத்துகள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கில் உயிர்ப் பலிகள் ஏற்படுகின்றன.
உயிர்ப் பலி ஒருபுறம்; காசைக் கரியாக்கியது மறுபுறம். சுற்றுச்சூழல் காற்று மாசு என்பது மனிதகுலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தீபாவளி பண்டிகை நேரத்தில் சுமார் 800 விபத்துகள் நடந்துள்ளன. காவிரி பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை உட்பட உரிமை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை தீபாவளி என்கிற பெயரில் திசை திருப்புவதாக உள்ளது'' என்று வீரமணி கூறியுள்ளார்.