

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் என தமிழகத்தில் 3 தொகுதிகளிலும், புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியிலும் அதிமுக வேட்பாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வரும் 19-ம் தேதி (நவம்பர் 19) தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் சோர்ந்து போய் உள்ள அதிமுகவினருக்கு தற்போதுள்ள தமிழக அரசியல் சூழலில் இந்த 3 தொகுதிகளின் வெற்றி முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த தொகுதிகளில் வென்றால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் திமுகவினர் இருக்கின்றனர். அதனால், 3 தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த தமிழகமே எதிர்நோக்கியுள்ளதால் வெற்றிக்கான நெருக்கடியில் திமுக, அதிமுகவினர் உள்ளனர்.
இந்நிலையில் தஞ்சாவூரில் எம்.ரங்கசாமி, அரவக்குறிச்சியில் வி.செந்தில் பாலாஜிம், திருப்பறங்குன்றத்தில் ஏ.கே.போஸ், நெல்லித்தோப்பில் ஓம்.சக்தி சேகர் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தின் 3 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம்:
தஞ்சாவூர் - எம்.ரங்கசாமி:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் மலையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.ரங்கசாமி(60). இவருக்கு மனைவி இந்திரா, மகன்கள் மனோபாரத், வினோ பாரத் ஆகியோர் உள்ளனர். பி.எஸ்ஸி., பி.எல். படித்துள்ள ரங்கசாமி, 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். 2011-ல் தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்றவர்.
அரவக்குறிச்சி - வி.செந்தில் பாலாஜி:
அரவக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி(41) மீண்டும் போட்டியிடுகிறார். இவர், கரூர் அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்தவர். பி.காம். படித்துள்ளார். தந்தை வேலுசாமி, தாய் பழனியம்மாள், மனைவி மேகலா, மகள் நந்தினி. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2011 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், போக்குவரத்துத் துறை அமைச்சரானார். 2016 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட எம்.ரங்கசாமி, வி.செந்தில்பாலாஜி ஆகியோருக்கு மீண்டும் போட்டி யிட அதிமுகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் - ஏ.கே.போஸ்:
கல்வித் தகுதி- எம்.ஏ(அரசியல்) மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். 2006-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
2011-ம் ஆண்டு தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். 1972-ம் ஆண்டு முதல் கட்சியின் உறுப்பினராக இருந்துவரும் இவர், 2003 முதல் 2006-ம் ஆண்டு வரை மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார். 2011-ம் ஆண்டு மீண்டும் 6 மாதம் மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார்.