

வடபழனி சாலையில் ரூ.69.43 கோடி செலவில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் இரண்டு அடுக்கு புதிய மேம்பாலம் அடுத்த மாதம் இறுதியில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் வகையில் வடபழனி 100 அடி சாலை முக்கியமானதாக இருக்கிறது. தினமும் சுமார் 1.85 லட்சம் வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றன. இதனால், அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வடபழனி சாலையில் போக்குவ ரத்து நெரிசலை தவிர்க்க, 2 அடுக்கு மேம்பாலம் கட்டப்படும் என்று கடந்த 2010-ம் ஆண்டு அரசு அறி வித்தது. முதல் மேம்பாலத்தில் வாக னங்களும், 2-வது மேம்பாலத்தில் மெட்ரோ ரயிலும் செல்ல திட்டமிடப் பட்டது. தரையில் இருந்து சுமார் 7 மீட்டர் உயரத்திலும், 520 மீட்டர் நீளம், 18.6 மீட்டர் அகலத்திலும் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. அதாவது, அசோக்பில்லர் கோயம் பேடு, கோயம்பேடு அசோக் பில்லர் இடையே இருபுறங்களிலும் ரூ.69.43 கோடி செலவில் இதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
பணிகள் நிறைவு
மெட்ரோ ரயில் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘வட பழனி சாலையில் 2 அடுக்கு மேம்பாலத்தின் முக்கியமான பணி களை சமீபத்தில் நாங்கள் முடித் துள்ளோம். தற்போது, இந்த மேம் பாலத்தில் ஏறும்போதும், இறங்கும் போதும் அமைக்க வேண்டிய சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் மக்க ளின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்படும். இந்த மேம்பாலம் திறந்தால், இந்த வடபழனி 100 அடிசாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்’’ என்றார்.
அடுத்த மாதம் இறுதியில் திறக்கவுள்ள இந்த மேம்பாலம் தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘வடபழனி இரட்டை மேம் பாலத்தில் மெட்ரோ ரயில் மேற் கொள்ளவேண்டிய பணிகளை முடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்களிடம் ஒப்படைத்துள் ளது. தற்போது, இந்த மேம்பாலத் தில் ஏறும், இறங்கும் சாலைகளை அமைக்கும் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். கோயம் பேடு பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஆனால், அசோக்நகர் பகுதியில் மெட்ரோ குடிநீர் குழாய் பணிகளால் சிறிது தாமதம் ஏற்படுகிறது. இந்த பணிகளும் விரைவில் முடியும் நிலையில் இருக்கின்றன. எனவே, அடுத்த மாதம் இறுதியில் மேம்பால சாலை பணிகள் முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு பாலம் திறக்கப்படும். இந்த மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது வடபழனி சிக்னல் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறையும்’’ என்றார்.