Published : 21 Aug 2022 04:05 AM
Last Updated : 21 Aug 2022 04:05 AM
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தொடர்பு கொண்ட ஒருவர், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் பொதுப்பணி, நீர்வளத் துறையினர் ஆகியோர், மோப்ப நாய் ஜெனி உதவியுடன் நேற்று முன்தினம் இரவு 12 மணி வரை மேட்டூர் அணையில் சோதனை மேற்கொண்டனர். எனினும், சோதனையில் சந்தேகத்துக்குரிய எந்தப் பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
பின்னர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள காமராஜ் நகரைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவரது பெயரில் அந்த எண் வாங்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இதையடுத்து, அந்த முகவரிக்குச் சென்ற போலீஸார், அங்கிருந்த கணேஷ்குமாரிடம் விசாரித்தனர். அவர், பெங்களூருவில் பணியாற்றும் தனது உறவினர் செந்தில் இரு நாட்களுக்கு முன் ஒரு சிம்கார்டு கேட்டதாகவும், அதனால் அவருக்கு சிம்கார்டு வாங்கிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போலீஸார் செந்திலைத் தேடி வந்தனர். இந்நிலையில், சுவிட்ச் ஆஃப் செய்து வைக்கப்பட்டிருந்த அந்த செல்போன் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் செயல்படத் தொடங்கியது.
மேட்டூர் அருகே உள்ள செல்போன் கோபுரத்திலிருந்து அந்த செல்போனுக்கு சிக்னல் கிடைப்பதைக் கண்டறிந்த போலீஸார், சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை மேற்கொண்டு, செல்போன் வைத்திருந்த நபரிடம் விசாரித்தனர்.
தனது பெயர் மகாலிங்கம் (53) என்றும், செந்திலிடம் இருந்து சிம் கார்டை ரூ.100 கொடுத்து பெற்றதாகவும், ஒரு வாரமாக செந்திலுக்கு வரும் அனைத்து அழைப்புகளும் இந்த எண்ணுக்கு வந்ததால் ஆத்திரமடைந்து, மது போதையில் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மகாலிங்கத்தைக் கைது செய்த மேட்டூர் போலீஸார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT