

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் இரண்டு முறை வெளிநடப்பு செய்தனர்.
சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம் வியாழக்கிழமை காலை ரிப்பன் வளாகத்தில் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் திருக்குறளும், தீண்டாமை ஒழிப்புக்கான உறுதிமொழியும் வாசிக்கப்பட்டது. அதன்பின்பு, ‘அம்மா உப்பு’, ‘அம்மா மருந்தகம்’ தொடங்கியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர பிரதேச அரசின் முயற்சிகளை முதலமைச்சர் ஜெயலலிதா தடுத்தார் என்றும், ஆனால் அரசியல் ஆதாயத்துக்காக, இதை திமுக தலைவர் கருணாநிதி, தான் தடுத்ததாக கூறிக் கொள்கிறார் என்றும் மேயர் சைதை துரைசாமி கூறினார்.
இதனால் கோபமடைந்த திமுக கவுன்சிலர்கள் மாமன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்தது குறித்து திமுக மாமன்ற உறுப்பினர் போஸ் கூறுகையில், “திமுக ஆட்சியில் இருக்கும்போது, பாலாறு, முல்லை பெரியாறு விவகாரங்களில் கருணாநிதி எடுத்த முயற்சிகளை மறைத்து தவறான தகவலை மேயர் பதிவு செய்கிறார். இந்த மன்றத்தில் குடிநீர், கழிவு நீர், சாலை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை பேச வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை” என்றார்.
செனாய் நகர் கலையரங்கத் துக்கு ‘அம்மா’ கலையரங்கம் என பெயர் சூட்ட நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பற்றிய விவாதத்தின் போது திமுக கவுன்சிலர் வாசு, தனக்கு பேசுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால், அந்த தீர்மானத்தின் விவாதம் முடிந்து விட்டது என்று கூறி மேயர் அனுமதியளிக்க மறுத்து விட்டார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மாமன்ற உறுப்பினர் வாசுவை வெளியேற்ற மேயர் உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.