Published : 16 Oct 2016 02:15 PM
Last Updated : 16 Oct 2016 02:15 PM

திமுகவினரை துன்புறுத்தும் செயல்களை காவல்துறை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்

அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில்தான் இந்த அவசர நடவடிக்கையை சென்னை மாநகர காவல்துறையினர் எடுத்து வருகிறார்கள் என்பது மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பியதாக இதுவரை 7 பேரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். 52-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளார்கள். அதிமுகவின் தொழில் நுட்பப் பிரிவில் இருப்பவர்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில்தான் இந்த அவசர நடவடிக்கையை சென்னை மாநகர காவல்துறையினர் எடுத்து வருகிறார்கள் என்பது மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது.

முதல்வர் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். அதே விருப்பம்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இருக்கிறது. ஆனால் “வதந்தி பரப்புவோர்” என்ற அடிப்படையில் அதிமுகவினர் அளிக்கும் பொய் புகார்களை அப்படியே சிரமேற்கொண்டு ஏற்று தி.மு.க.வினரை அழைத்து விசாரிப்பது, துன்புறுத்துவது, அவர்களின் முகநூல் கணக்குகளை முடக்குவோம் என்று மிரட்டல் விடுப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் சென்னை மாநகர காவல்துறையினர் ஈடுபட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகர காவல்துறையினரின் அத்துமீறிய செயல் குறித்து ஏற்கனவே தி.மு.க. சட்டத்துறையின் சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கும், தமிழக காவல்துறை தலைவருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக தி.மு.க.வினர் மீதே திட்டமிட்ட அடக்குமுறையை சென்னை மாநகர காவல்துறை கட்டவிழ்த்து விடுவது எந்த விதத்திலும் நியாயமல்ல. “முதல்வரின் உடல் நலம் குறித்து தி.மு.க.வினர்தான் வதந்தி பரப்புகிறார்கள்” என்ற ஒரு தோற்றத்தை உருவாக்க நினைக்கும் அதிமுகவின் முயற்சிக்கு துணை போகும் விதத்தில் சென்னை மாநகரக் காவல்துறை செயல்படுகிறதோ என்ற சந்தேகமே எழுகிறது.

அதிமுகவின் அரசியல் ஆதாயத்திற்கு சென்னை மாநகரக் காவல்துறை பயன்படுவதை சட்டத்தின் ஆட்சியின் மீதும், பேச்சு சுதந்திரம் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் எவராலும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் அல்லது வதந்திகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தகவல் தொழில் நுட்பச் சட்டம் வழி வகுத்தது. அந்த சட்டத்தை காவல்துறை தவறுதலாக பயன்படுத்தியதால் “ஸ்ரேயா சின்ஹால்” என்பவர் தொடுத்த வழக்கில் தகவல் தொழில் நுட்பச் சட்டப் பிரிவு 66(A) -ஐ ரத்து செய்த உச்சநீதிமன்றம் கருத்து சுதந்திரத்தை காப்பாற்றியது.

சட்டப்பிரிவு 66(A) படி இனிமேல் வழக்கு பதிவு செய்ய முடியாது என்பதால் தற்போது சென்னை மாநகர காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, அதில் உள்ள பிரிவு 505 -ஐ தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதுவரை நடைபெற்றுள்ள கைதுகளில் கோவை வங்கியில் இரு ஊழியர்களுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலை மட்டுமே புகாராக எடுத்துக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த இரு வங்கி ஊழியர்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 505 -வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள். இந்த பிரிவைப் பயன்படுத்த வேண்டுமென்றால் “வதந்தியோ அல்லது தகவலோ பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும்” என்பது முக்கியமான நிபந்தனை. “இந்திய தண்டனைச் சட்டத்தின் 505 ஆவது பிரிவை பயன்படுத்த பிரசுரம் இன்றியமையாதது” என்று “பிலால் அகமது கலூ vs ஆந்திர மாநில அரசு” என்ற வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.ஆனந்த், கே.டி.தாமஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்கனவே மிகத் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. “வெறும் உரையாடல்” செய்து கொண்டிருந்தார்கள் என்று அதிமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை வங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. இந்தக் கைது கொடுமையானது மட்டுமல்ல, கொடூரமான மனித உரிமை மீறல் ஆகும்.

வதந்தி பரப்புவோரை கைது செய்கிறோம் என்ற போர்வையில் முகநூல், சமூக வலைத்தலங்களில் உள்ள தி.மு.க.வினரை குறி வைத்து சென்னை மாநகர காவல்துறையினர் செயல்படுவதை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதுவும் அதிமுகவின் தொழில் நுட்பப் பிரிவை துணைக்கு அழைத்துக் கொண்டு தி.மு.க.வினரை துன்புறுத்த முயலும் சென்னை மாநகர காவல்துறைக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவினரின் புகாரின் பேரில் முகநூலில் உள்ள தி.மு.க.வினரை குறி வைத்து நடவடிக்கை எடுப்பதை சென்னை மாநகர காவல்துறை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x