

அடுக்குமாடி குடியிருப்பில் டைல்ஸ் பெயர்ந்து தலையில் விழுந்ததில் கணவன், மனைவி காயம் அடைந்தனர்.
சென்னை மந்தைவெளி திருவேங்கடம் சாலையில் ‘ராஜமாலிகா’ என்ற 4 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் 2-வது தளத்தில் ரமேஷ் பாரதி (60) சாந்தி (54) தம்பதி வசிக்கின்றனர். தீபாவளிக்குத் தேவையான பொருட்கள் வாங்க இருவரும் நேற்று மாலை 4.30 மணி அளவில் புறப்பட்டனர்.
தரைதளத்துக்குச் செல்ல லிப்ட்டுக்கு காத்திருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக லிப்ட்டுக்கு வெளியே, மேல் பகுதியில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் பெயர்ந்து இவர்களது தலையில் விழுந்தன. இதில், சாந்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரமேஷ் பாரதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இருவரும் உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து ரமேஷ் பாரதி கூறும்போது, ‘‘பிரபல கட்டுமான நிறுவனத்தினர் இந்த அடுக்குமாடியை கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் கட்டிக் கொடுத்தனர். கட்டுமானப் பணியை அவர்கள் சரியாக செய்யாததால்தான், டைல்ஸ் பெயர்ந்து விழுந்து விபத்து நேரிட்டுள்ளது. இந்த குடியிருப்பில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என பலரும் உள் ளனர்.
இதுபோன்ற விபத்து மீண்டும் நடக்காத வகையில், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். சம்பவம் குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் ரமேஷ் பாரதி புகார் கொடுத்துள்ளார்.