மாநகராட்சி சார்பில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்றும், நாளையும் ‘சென்னை தினம்’ கொண்டாட்டம்

மாநகராட்சி சார்பில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்றும், நாளையும் ‘சென்னை தினம்’ கொண்டாட்டம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்றும், நாளையும் சென்னை தினம் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சிவெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. 383 ஆண்டுகளில் சென்னை மாநகரமாக பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஆக.22-ம்தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் மாநகராட்சி சார்பில் இன்றும் (ஆக.20), நாளையும்(ஆக.21) இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை சாலையில் மாலை 3:30 மணி முதல் இரவு 11:30 வரை பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவற்றை நடத்தவும், உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகளை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியின் சார்பில் கரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் இயற்கை உர விற்பனை கடைகளும் அமைக்கப்பட உள்ளன.

கொண்டாடத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்களில் ‘செல்ஃபி பூத்கள்’ அமைக்கப்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பல இடங்களில் மரக்கன்றுகளை நடும்பணிகளும் நடைபெற உள்ளன. மேலும்,பிரத்யேகமாக பாடல் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in