

ஆலந்தூர் சுற்றியுள்ள இடங்களில் நீர் ஆதாரம் பெருக்க ஆதம்பாக்கம் ஏரியை தூர்வாரி பாதுகாக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஆலந்தூர் மண்டலத்தில் பழவந்தாங்கல், நங்கநல்லூர், தில்லைகங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நீர் ஆதாரமாக இருந்ததுதான் ஆதம்பாக்கம் ஏரி. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 100 ஹெக்டேரில் இருந்த இந்த ஏரி, தற்போது 13 ஹெக்டேராக சுருங்கி விட்டது. முன்பெல்லாம் இங்கு சுற்றியுள்ள பகுதிகளில் எவ்வளவு கனமழை பெய்தாலும், அந்த நீர் இந்த ஏரியில் வந்து சேர்ந்து விடும். ஆனால், இப்போதுள்ள ஆக்கரமிப்புகளால் மழை நீர் ஆங்காங்கே குட்டைபோல் தேங்கி வீணாகி விடுகிறது. ஏரி நிலப்பரப்பும் சுருங்கிவிட்டது.
கடந்த 20 ஆண்டுகளாக ஏரியை தூர்வாராததால் திடக்கழிவு, குப்பைகள் குவிந்து, ஏரியின் ஆழம் 5 அடியாக குறைந்து விட்டது. தன்னார்வ தொண்டு அமைப்புகள் அப்பகுதி மக்களுடன் இணைந்து இந்த ஏரியில் அடிக்கடி ஏரியை தூய்மைப்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சபரி பசுமை அறக்கட்டளையின் அறக்காவலர் வி.ராமாராவ், செயலர் வி.சுப்பிர மணியன் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ஆதம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்துவிட்டு, விவசாயம் செய்தது ஒரு காலம். ஆனால், இப்போது இருக்கும் நிலையோ வேறு. ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டதால், ஏரியின் நிலப்பரப்பு குறைந்து விட்டது. ஒருங்கிணைந்த மழைநீர் கால்வாய் பணிகளை சீரமைக்காததால், ஏரிக்கு போதிய நீர் செல்வதில்லை. இந்த ஏரியை சீரமைக்கக் கோரி அரசியல் கட்சியினரிடமும், பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பல்வேறு முறை மனுவும் கொடுத்து விட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள ஏரியை தூர்வாரி, தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமென்பது இங்குள்ள மக்களின் 20 ஆண்டுகள் கோரிக்கையாக இருக்கிறது.
இந்த ஏரியை தூர்வாரி, இருபுற மும் கரை அமைத்து பாதுகாத்தால் ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர் உள்ளிட்ட 5 கி.மீ தூரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக இருக்கும். இதனால், சுமார் 2 லட்சம் மக்கள் பயன்பெற முடியும். போதிய அளவில் மழைநீர் கால்வாய்கள் அமைத்து ஏரியை இணைத்து விட்டால், மழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கையும் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.