Published : 05 Oct 2016 04:14 PM
Last Updated : 05 Oct 2016 04:14 PM

முதல்வர் நலம் பெற குழந்தைகளுக்கு அலகு குத்துவதா?- ராமதாஸ் கண்டனம்

முதல்வர் நலம் பெற குழந்தைகளை கட்டாயப்படுத்தி அலகு குத்தி கொடுமைப்படுத்துவது மனித உரிமை மீறலாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வரம் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும்.

ஆனால், முதல்வரிடமும், அவருக்கு நெருக்கமாக இருப்பவர்களிடமும் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, வேண்டுதல் என்ற பெயரில் அக்கட்சியின் நிர்வாகிகள் நடத்தும் மனித உரிமை மீறல்கள் கவலையும், வேதனையும் அளிக்கின்றன.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டும் என்பதற்காக, முதல்வரின் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலுள்ள தண்டையார்பேட்டை நேதாஜி நகர் முருகன் கோவிலில் கடந்த திங்கட்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டிருக்கிறது.

வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வில் நேதாஜி நகர் முருகன் கோவிலில் தொடங்கி தண்டையார் பேட்டை மணிக்கூண்டு அருகிலுள்ள சேனியம்மன் கோவில் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி வந்தனர்.

அதுமட்டுமின்றி, நூற்றுக்கும் மேற்பட்டோர் உடலில் அலகு குத்தி வந்தனர். அவர்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் 5 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் என்பது தான் பெருங்கொடுமை.

அலகு குத்தும் போது, வலி தாங்க முடியாமல் அக்குழந்தைகள் கதறித் துடித்தது காண்போர் நெஞ்சை கணக்க வைத்தது.

குழந்தைகள் வேண்டாம் என மறுத்தும் கட்டாயப்படுத்தி அலகு குத்தப்பட்டது. சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் இத்தகைய வன்முறைகள் தொடர்கின்றன.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று வழிபாடு நடத்துவதும், காவடி எடுப்பது, பால்குடம் சுமப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் அதிமுகவினரின் உரிமை.

அவர்களின் நம்பிக்கையில் எவரும் தலையிட முடியாது. அது நாகரிகமும் கிடையாது. ஆனால், அத்தகைய வழிபாடுகள் அனைத்துமே சுய விருப்பத்தின் அடிப்படையிலானவையாக இருக்க வேண்டும்.

மாறாக ஒன்றுமறியா அப்பாவிக் குழந்தைகளை கட்டாயப்படுத்தி அலகு குத்தி கொடுமைப்படுத்துவது இதயம் உள்ள எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

பால் மனம் மாறாத குழந்தைகளின் ஒரு கன்னத்தில் இரண்டு அடி நீளமுள்ள தடிமனான வேலை குத்தி அதை இன்னொரு கன்னம் வழியாக இழுத்து நிறுத்தும் இரக்கமற்ற கொடுமையை எந்த காரணத்தைக் கூறியும் நியாயப்படுத்த முடியாது.

அதிமுகவினரின் இச்செயல் மன்னிக்க முடியாத மனித உரிமை மீறலாகும்.

இந்தியா கையெழுத்திட்ட குழந்தை உரிமைக்கான ஐ.நா. ஒப்பந்தத்தில்,‘‘குழந்தைகளின் உரிமைகள் மதிக்கப்படுதல், பாதுகாக்கப் படுதல், நிறைவேற்றப்படுதல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு உள்ளது.

குழந்தைகளின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பாரம்பரிய நடைமுறைகளை ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசுகள் எடுக்க வேண்டும்’’ என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்தக் கடமையை செய்ய வேண்டிய முதலமைச்சரின் பெயரால், குழந்தைகள் மீது அவர்களின் உடல் நலனை கெடுக்கக்கூடிய அலகு குத்துதல் உள்ளிட்ட சடங்குகளை அதிமுகவினர் திணிப்பது கண்டிக்கத்தக்கது.

அதிமுகவினர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது இதுதான் முதல் முறை என்று கூற முடியாது. முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளின் போதும், ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட போதும் இதேபோன்ற செயல்களில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்தநாளையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் சென்னை வேளச்சேரியில் 668 பேருக்கு பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலமைச்சர் நலம் பெற வேண்டும் என்பதற்காக அலகு குத்திக் கொள்ளவும், முதல்வரின் பிறந்த நாளில் பச்சைக் குத்திக் கொள்ளவும் கட்டாயப்படுத்தப்படும் குழந்தைகளில் ஒருவர் கூட அதிமுக ஆட்சியில் பயனடைந்த அமைச்சர்களின் குழந்தைகளோ, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழந்தைகளோ அல்ல. அவர்கள் அனைவரும் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாத பரம ஏழைக் குழந்தைகள் ஆவர்.

அவர்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு, சில நூறு ரூபாய்களைக் கொடுத்து அக்குழந்தைகளுக்கு இந்த சடங்குகளைச் செய்து கட்சித் தலைமையிடம் நல்ல பெயரை வாங்கிக்கொள்வதை அதிமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். விசுவாசத்தையும், வழிபாட்டையும் கூலிக்கு ஆள் வைத்து செய்வது என்ன வகையான பக்தியோ?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். அதற்காக குழந்தைகள் மீது இதுபோன்ற வன்முறைகளை திணிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

இத்தகைய செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம் என்று ஆட்சித் தலைமையும், அதிமுக தலைமையும் அறிவுறுத்த வேண்டும்.

இத்தகைய கொடுமைகள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையமும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இதற்கு காரணமானவர்களையும், அவர்களை தூண்டியவர்களையும் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x