Published : 26 Oct 2016 05:26 PM
Last Updated : 26 Oct 2016 05:26 PM

3 தொகுதி தேர்தலில் தமாகா போட்டியில்லை: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தலில் தமாகா போட்டியிடாது என அக்கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், "தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 19ம் தேதி நடைபெறும் இடைத் தேர்தலில் தமாகா பங்கேற்காது. இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுவதில் சந்தேகம் உள்ளது. இடைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் இருப்பது இது ஒன்றும் புதிதில்லை" என்றார்.

இது தொடர்பாக தமாகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் 2001-ம் ஆண்டு முதல் கடந்த 15 ஆண்டுகளில் 22 இடைத்தேர்தல்கள் நடந்திருக்கின்றன. இவை அனைத்திலும் ஆண்ட கட்சிகளே வெற்றியைப் பறித்திருக்கிறது என்பதையே கடந்த கால தேர்தல் முடிவுகள் தெரிவித்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இடைத்தேர்தல் என்பதே ஆளும் கட்சிக்கான தேர்தல் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

இந்த இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது என்பது ஒரு தேர்தல் சம்பிரதாயமாக இருக்கிறதே தவிர எவ்வளவு முயற்சி எடுத்தாலும் வெற்றி என்பது ஆளும் கட்சிக்கே என்பது எழுதப்படாத சரித்திரமாகியுள்ளது.

தேர்தலில் பங்கெற்பது என்பது ஒரு அரசியல் கட்சியின் தலையாய கடமையாகும். குறிப்பாக இடைத்தேர்தல் என்பது ஆளுகின்ற கட்சியினுடைய நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை கவனிக்கின்ற தேர்தலாக இருக்கின்ற காலகட்டம் போய், இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியே வெற்றி பெற முடியும் என்ற நிலைப்பாடு நிலவி வருகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு வலுவான அரசியல் கட்சியாக வளர்ந்து வருகிறது. அதனை மேம்படுத்தும் அனைத்து விதமான நல்ல முயற்சிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.

இடைத்தேர்தல்களில் அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் இருப்பது என்பது புதிதல்ல. இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு நடைபெற இருக்கின்ற தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியில்லை என்ற முடிவை நாங்கள் எடுத்திருக்கின்றோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x