Published : 20 Aug 2022 06:25 AM
Last Updated : 20 Aug 2022 06:25 AM
கோவில்பட்டி: தூத்துக்குடி - மதுரை இடையே கடந்த 2007-ம் ஆண்டு ரூ.165 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. வழியோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எளிதாக சாலையை கடந்து செல்வதற்கு வசதியாக ‘U' வளைவு அமைக்கப்பட்டது. இந்த ‘U’ வளைவு இடதுபுறமாக வரும் வாகனங்கள் சாலையின் மறுபுறம் அதாவது வலதுபுறமாக உள்ள கிராமங்களுக்கு செல்ல வசதியாக இருந்து வருகிறது.
குறுக்குச்சாலை, எப்போதும்வென்றான், சோழாபுரம், கீழஈரால், எட்டயபுரம், சிந்தலக்கரை, முத்துலாபுரம், தாப்பாத்தி, வெம்பூர்,அழகாபுரி மற்றும் பல்வேறு கிராம பகுதிகளில் ‘U’ வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் ‘U’ வளைவு இருப்பதை வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் விதமாக சிவப்பு சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ‘U’ வளைவு பகுதிகளில் அந்தந்த காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட போலீஸாரால் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பல இடங்களில் ‘U’ வளைவு பகுதியில் சோலார் சிக்னல் விளக்குகள் இயங்காமல் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ‘U’ வளைவுகளில் உள்ள சோலார் சிக்னல் விளக்குகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிகார்டுகள் வைக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அயன்வடமலாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “தூத்துக்குடி - மதுரை இடையேயான நான்குவழிச்சாலையில் ‘U’ வளைவுகளில் உள்ள சோலார் சிக்னல்கள் பல இடங்களில் இயங்காமல் உள்ளன. குறிப்பாக வெம்பூர் விளக்கில் பொருத்தப்பட்டுள்ள சிக்னல் விளக்கு பல ஆண்டுகளாகவே இயங்காமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து புகார் அளித்தும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலக்கரந்தையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை பராமரிப்பின்றி பெயரளவில் காணப்படுகிறது.
இதனை மேம்படுத்த வேண்டும். தாப்பாத்தி ‘U’ வளைவில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும். முத்துலாபுரம் ஆற்றுப்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரீட் அடிக்கடி உடைந்துவிடுகிறது. அதனை சரிசெய்ய வேண்டும். ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT