

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் கோழி கழிவுகளை தனியாக உரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடு, வீடாகச் சேகரிப்படும் குப்பை மண்டலம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் தூய்மை பணியாளர்கள் குப்பையை எரித்து வருவதாக புகார் இருந்தாலும் மண்டல அளவிலான குப்பை தரம் பிரிப்பு பணி தடையில்லாமல் செய்து வருகின்றனர்.
இதில், காட்பாடி காந்திநகர் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை வீடுகளில் தரம் பிரித்து கொடுக்கிறார்களா? என்பதை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக காட்பாடி காந்திநகரில் உள்ள மண்டல அலுவலக வளாகத்தில் செயல்படும் குப்பை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணியை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘காட்பாடி காந்தி நகர் பகுதியில் 44 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து கொட்டப்படும் குப்பையை திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தரம் பிரித்து நுண்ணுரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈரப்பதம் இருக்க கூடிய பொருட்களும் நுண்ணுரமாக தயாரிக்கப்படுகிறது.
வீடுகளில் அட்டைப் பெட்டிகள், காகிதங்கள், காகிதப் பைகள், துணிமணிகள், பிளாஸ்டிக் ஆகியவற்றை தனியாக எடுத்து வைக்க வேண்டும். குப்பையோடு சேர்த்து கொடுக்க வேண்டாம். அதேபோல், பால், தயிர் பாக்கெட்டுகள், காய்கறி கழிவுகள் உள்ளிட்டவற்றை தனியாக எடுத்து வைத்து கொடுக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை மையத்தில் தினசரி 850 முதல் 1,000 கிலோ வரை நுண்ணரம் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் மாநகராட்சி முழுவதும் 52 இடங்களில் நுண்ணுரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும், பேரூராட்சிகள், நகராட்சி பகுதி களிலிருந்து கொட்டப்படும் கோழி கழிவுகள் தனியாக உரம் தயாரிக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டு வருகிறது’’ என்றார்.
இந்த ஆய்வின்போது, வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந் தனர்.