மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது: திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தல்

மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது: திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தல்
Updated on
2 min read

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வை எதிர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகரில் தண்ணீர் லாரி மோதி 3 கல்லூரி மாணவிகள் பலியாகியுள்ளனர். மிகப்பெரிய கொடுமை இது. அவர்களின் பெற்றோருக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை. போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. எனவே, வாகனங் களை ஓட்டுபவர்கள் மனிதாபி மானத்தோடும், எச்சரிக்கை யுடனும் செயல்பட வேண்டும்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் ஒரே நாளில் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. தங்கள் குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் சார்பில் இந்தக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இல.கணேசனுக்கு வாழ்த்து

தமிழக பாஜக தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜகவுக்காக நீண்டகாலம் உழைத்து வருபவர். என்னிடம் தனிப்பட்ட முறையில் என்றும் மாறாத அன்பு கொண்டவர். அவரை மனதார வாழ்த்துகிறேன்.

காவிரியில் இருந்து தமிழகத் துக்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கூறியிருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியத்தை கைகழுவிய மத்திய அரசு, மேகதாது அணை பிரச்சினையில் நியாயமாக நடந்து கொள்ளும் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதி மன்றம் தடை விதித்தபோது, நீதிமன்ற தீர்ப்பை மீற முடியாது என மத்திய அரசு கூறியது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும், அவ்வாறு செய்ய முடியாது என்கிறது மத்திய அரசு.

கடந்த 6 ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் வழங் கப்படவில்லை. அதற்கான காரணத்தை சொல்ல முடியாது என தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் தேவா கூறியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் யாரும் கலைமாமணி இல்லை என்பதும் ஒரு சாதனை என கூறிக்கொள்ளலாம்.

சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள மருத் துவக் கல்வி நுழைவுத் தேர்வை எதிர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. வழக் கம்போல இந்த விஷயத்திலும் அதிமுக அரசு தூங்கிவிடுமானால் பிற்படுத்தப்பட்ட மற்றும் கிரா மப்புற இளைஞர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது பகல் கனவாகிவிடும்.

பொது விநியோகத் திட்டத் தின்படி வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கான அரிசியின் விலையை மத்திய அரசு கிலோ ரூ.8.30-ல் இருந்து ரூ.22.54 ஆக உயர்த்தியுள்ளது. மத்திய பாஜக அரசு சத்தமில்லாமல் செய்திருக்கும் கொடுமை இது. இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

அண்ணா நூலக பராமரிப்பு

திமுக ஆட்சியில் உருவாக்கப் பட்டது என்பதற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதிமுக அரசு பராமரிக்கவில்லை. அடிப் படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. இது தொடர் பாக தொடரப்பட்ட வழக்கில் நூலகத்தை பராமரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நூலகத்தை சீரமைக்க காலக்கெடுவும் விதித்தது. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in