

உச்ச நீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்தும் வண்ணம் ராணுவத்தை கர்நாடகத்துக்கு அனுப்பி காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அணைகளை திறந்து விட வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதைத் தடுப்பதற்காகவும், மத்திய அரசை மிரட்டுவதற்காகவும் முன்னாள் பிரதமர் தேவகவுடா சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக முதலமைச்சரும், பிற கட்சித் தலைவர்களும் போர்க்கொடி உயர்த்தியிருப்பது அரசியல் சட்டத்தை மதிக்காதப் போக்காகும்.
உச்ச நீதிமன்ற ஆணைப்படி திறக்க வேண்டிய தண்ணீரை இதுவரை திறக்கவில்லை. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை செயல்படுத்தும் வண்ணம் கர்நாடகத்துக்கு ராணுவத்தை அனுப்பி அணைகளை திறக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும்.
நேற்று கர்நாடக முதல்வர் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் கலந்து கொண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அரசியல் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் எதிராகச் செயல்படும் இந்த மூன்று அமைச்சர்களின் மீது பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் மதிப்பு நிலை நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் விரும்பத்தகாத விளைவுகள் எதிர்காலத்தில் உருவாகும்'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.