

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கருவியில் கோளாறு ஏற்படுவதாக ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ சேவையில் சென்னை வாசகர் புகார் கூறியுள்ளார். இது சம்பந்த மாக உணவுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் பல ஆண்டு களாக இணைப்பு பக்கங்கள் ஒட்டி பயன்படுத்தப்பட்டு வரும் குடும்ப அட்டைகள் இந்த ஆண்டுடன் காலாவதியாக உள்ளன. இந்நிலையில், அடுத்த ஆண்டில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முதல்கட்டமாக, பொது விநியோகக் கடை களுக்கு புதிய கருவிகள் வழங்கப்பட்டு, ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக அயனாவரத்தை சேர்ந்த சி.எஸ்.செல்வம் என்பவர் ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ சேவையை தொடர்புகொண்டு கூறியதாவது:
எங்கள் பகுதியில் உள்ள பொது விநியோகக் கடையில் இந்த ஆதார் இணைப்பு பணியில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால், அவர் களில் 3 பேரின் ஆதார் அட்டைகளை மட்டுமே ஸ்கேன் செய்ய முடிகிறது. மற்றவர்களின் ஆதார் அட்டைகளை ஸ்கேன் செய்தால் பதிவாவதில்லை. அடுத் தடுத்த முறை சென்று பதிவு செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது.
இது இயந்திரக் கோளாறா, இணையப் பிரச்சினையா என்பது தெரியவில்லை. இதனால், பொதுமக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர். இதுதொடர்பாக, கடை ஊழியருக்கும் எதுவும் தெரிவதில்லை. புதிய அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கும் அரசு விரைவில் இப் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி உணவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ‘பாயின்ட் ஆஃப் சேல்’ கருவியில் 3ஜி சிம் கார்டு இருக்க வேண்டும். சில இடங்களில் 2ஜி சிம்கார்டு பொருத்தப்பட்டிருந்ததால், இணைய தொடர்பில் சிக்கல் கள் ஏற்பட்டன. இது கண்டு பிடிக்கப்பட்டு சிம்கார்டு அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கருவியில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க, சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் அல்லது வட்டார வழங்கல் அலுவலர் அலுவல கங்களில் பழுது நீக்குபவர்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ள னர். ஊழியர்கள், கரு வியை கொண்டுவந்து கொடுத் தால் உடனடியாக பிரச்சினை களை சரிசெய்ய உத்தரவிடப் பட்டுள்ளது’’ என்றனர்.