

அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா திரையரங்கம் வரிசையில் விரைவில் வருகிறது அம்மா தேயிலைத் தூள்.
அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழகம் முழுவதும் மலிவு விலையில் தரமான உணவுகள் கிடைக்கும் வகையில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் தாகத்தை தீர்க்கும் வகையில் மலிவு விலையில் ஒரு லிட்டர் அம்மா குடிநீர் ரூ.10-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அயோடின் கலந்த அம்மா உப்பு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிசையில் அம்மா தேயிலைத் தூள் விற்பனை விரைவில் தொடங்கப்படவுள்ளது.
நீலகிரியில் பசுந்தேயிலை விலை வீழ்ச்சி அடைந்ததால் தேயிலை விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூளை சந்தைப்படுத்த ‘ஊட்டி டீ’ என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறு, குறு தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரேஷன் கடைகளிலும் இந்த தேயிலைத் தூள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் (டான்டீ) மூலமாக உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூள் ‘அம்மா தேயிலைத் தூள்’ என்ற பெயரில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் டான்டீ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.