

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அறிவித்த போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏஐடியுசி) பொதுச் செயலாளர் ஜெ.லட்சுமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு போனஸ் சட்டத்தின் கீழ் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிகபட்சமாக ரூ.16 ஆயிரத்து 800 வரை கிடைக்கும். தீபாவளி பண்டிகை நெருங்கவுள்ள நிலையில் இன்னும் போனஸ் தொகை வழங்கப்படவில்லை. இதேபோல், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.5,000 பண்டிகை முன் பணமும் வழங்கப்படவில்லை.
ஆனால் மின்சாரம், நுகர்பொருள் வாணிபக் கழகம் தொழிலாளர்களுக்கு அரசு அறிவிக்கப்பட்ட போனஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் இதுபோன்ற நடவடிக்கையால் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான போனஸ் தொகை உடனடியாக வழங்க வேண்டும்'' என்று லட்சுமணன் கூறியுள்ளார்.