

நாணயவியல் ஆய்வுக்கழக தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி
கடந்த சில ஆண்டுகளாக ‘மாறன்’ மற்றும் ‘செழியன்’ பெயர் பொறித்த நாணயங்கள் கிடைத்து வருவது வரலாற்று ஆய்வாளர்களுக்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளதாக தென்னிந்திய நாண யவியல் ஆய்வுக்கழக தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
நான் சமீபத்தில் மதுரை சென்ற போது, நீண்டகால நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் கடந்த 30 ஆண்டுக ளாக தொன்மையான நாணயங்களைச் சேகரித்து, விற்பனை செய்து வருகிறார். அவர் தன்னிடம் இருந்த 2 வெள்ளித் தகடுகளைத் தந்து, கிரேக்க நாணயங்கள் என்றும் ஆய்வு செய்யுமாறும் தெரிவித்தார்.
அந்த வெள்ளித்துண்டுகளில் ஏதோ ஒரு உருவம் இருப்பது தெரிந்தது. அவற்றைச் சென்னை கொண்டுவந்து சுத்தம் செய்து, பல நாட்கள் ஆய்வு செய்தேன்.அப்போது அதில் ஒன்று சங்க கால வெள்ளி நாணயம் என்பது தெரியவந்தது.
அந்த நாணயத்தின் முன்புறத்தில், வலப்பக்கம் நோக்கி மன்னரின் தலையும் அதன் மேல் கிரீடமும் உள்ளது. அந்த கிரீடத்தை அழகு செய்யும் நீண்ட குஞ்சம், நெற்றியில் இருந்து பின்னோக்கி பின்புறம் கழுத்து வரை உள்ளது. முகத்துக்கு எதிரில் மேலிருந்து கீழாக தமிழ் - பிராமி எழுத்து முறையில் 4 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்களைச் சேர்த்து படிக்கும் போது ‘செழியன்’ என்ற பெயர் வருகிறது.
இதில் ‘ய’ என்ற எழுத்து முழுமையாக இல்லை. வலது பக்கம் அடிப்பகுதியில் உள்ள வளைவு தெளிவாக இல்லை. அந்த பகுதியில் வட்ட வடிவிலான பள்ளம் உள்ளது. வெள்ளியின் தரத்தைச் சோதிக்கும்போது அந்த பள்ளம் உருவாகியிருக்கலாம்.
பின்புறத்தில் உள்ளவற்றை எளிதில் படிக்க முடியவில்லை. நாணயத்தின் நடுவில் மனிதன் தலைமை குனிந்துகொண்டு நிற்கிறான், அவன் முன்னங்கால் அருகில் பானை போன்ற சின்னம் உள்ளது. அந்த மனிதனின் இடுப்பு மற்றும் கைகளுக்கு இடையில் இருந்து கயிறுகள் மேல் நோக்கி செல்வது போல் உள்ளது. கடலில் முத்துக் குளிப்பவர்கள்தான் இதுபோல், கயிறுகளை கட்டி கடலுக்குள் இறங்குவர். கயிற்றைக் கடலுக்குள் இறங்குபவர் அசைத்ததும், படகில் இருப்பவர்கள் அவர்களை வெளியில் கொண்டுவருவர்.
கடந்த 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன் கொற்கைப் பாண்டியர்கள் தங்கள் கடற்பகுதியில், விளைந்த முத்தை போர்க் கைதிகளைப் பயன்படுத்தி அறுவடை செய் ததாக படித்த நினைவு வந்தது. உலகின் சிறந்த முத்துக்கள் இங்கு விளைந்ததால், கிரேக்கர்கள், ரோமானியர்கள் வெள்ளி மற்றும் தங்கக் கட்டிகளைக் கொடுத்து முத்துக்களை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக மாறன், செழியன் பெயர் பொறித்த நாணயங்கள் வெளிவருவது, தற்போது வரலாற்று ஆய்வாளர்களுக்குத் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசோக பேரரசர் தன் கல்வெட்டில் கூறியுள்ள, ‘தம்பிரபருணி’ நாடு கொற்கை பாண்டியனது நாடுதான் என்பதை வருங்கால கண்டுபிடிப்புகள் உறுதி செய்யும் காலம் வருகிறதோ என கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னையில் எல்எஸ்சி தலைமை அலுவலகத்தை அதன் தலைவர் ஆர்.தினேஷ் தொடங்கி வைத்தார்.