

குடிநீரில் சேறு, கழிவுநீர் கலந்துவருவதால் அனைத்து தேவைகளுக்கும் கேன் குடிநீரை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவலநிலை உள்ளதாக ராயப்பேட்டை பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை, ராயப்பேட்டை கோயா அருணகிரி இரண்டாவது தெரு, மூன்றாவது தெரு, கபூர் சாகிப் தெரு, நாயர் ஐயாப்பிள்ளை தெரு, நாயர் வரதப்பிள்ளை தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத் துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிகளில், கடந்த பல மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து கோயா அருணகிரி 3-வது தெருவைச் சேர்ந்த விமலா கூறும்போது, “கடந்த 6 மாதங்களாக எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் சேறு, கழிவுநீர் கலந்த குடிநீர்தான் வருகிறது. இதனால், அந்த தண்ணீரை குடிக்க முடியாத நிலை உள்ளது. சில நேரங்களில் சாக்கடை நீரும் கலந்து வருவதால் அந்த தண்ணீரை குளிப்பதற்கும், துவைப்பதற்கும்கூட பயன் படுத்த முடியவில்லை. குடிநீருக் காக வரிப்பணம் கட்டிவிட்டு, அனைத்து தேவைகளுக்கும் கேன் நீரை விலைகொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய அவலநிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் கூறியும் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருக்க நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றார்.
இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இந்தப் பகுதிகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.