

ஆலந்தூர் மும்தாஜ் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி(40). ஆலந்தூர் மார்க்கெட்டில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம், நேற்று மாலை 2 இளைஞர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து காய்கறி கேட்டுள்ளனர்.
அவர்கள் கொடுத்த நோட்டில் சந்தேகம் அடைந்த லட்சுமி அக்கம் பக்க கடைகளுக்குச் சென்று விசாரித்தார். அது கள்ள நோட்டு என தெரியவந்தது. உடனே அந்த இளைஞர்கள் இருவரும் ஓட்டம் பிடித்தனர். ஒருவரை மட்டும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து ஆலந்தூர் போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தரிபுல்லா(38) என தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கான நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவை கள்ள நோட்டுகளா என விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.