Published : 10 Oct 2016 09:31 AM
Last Updated : 10 Oct 2016 09:31 AM

மேட்டூர், பவானிசாகர் அணைகளில் காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு ஆய்வு: டெல்டா மாவட்டங்களில் இன்று பார்வையிடுகின்றனர்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழுவினர் மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளின் நீர் இருப்பு விவரங்களை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் அவர்கள் இன்று ஆய்வு நடத்துகின்றனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் மனுவை கடந்த 4-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர்நிலை குழுவை அமைத்து, தமிழகம், கர்நாடகாவில் அணைகள், காவிரி பாசனப் பகுதிகளை ஆய்வு செய்து, உண்மை நிலை குறித்த நிலவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையிலான உயர்நிலை தொழில்நுட்பக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

அக்குழுவில் மத்திய நீர்வள ஆணைய பிரதிநிதி சையத் மசூத் ஹுசேன், தலைமைப் பொறியாளர் குப்தா, கர்நாடக மாநில தலைமைச் செயலாளர்கள் (பொ) குருபதசாமி, ஜெயபிரகாஷ், மத்திய அரசின் வேளாண்துறை கூடுதல் அரசு செயலாளர் ரத், தமிழக பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகர், தமிழ்நாடு காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், நீர்வளத்துறை முதன்மை செயலர் ராகேஷ் சிங், கேரள தலைமைப் பொறியாளர் மாதவ், புதுச்சேரி தலைமைப் பொறியாளர் பி.சுவாமிநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உயர்நிலை தொழில்நுட்பக் குழுவினர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் கர்நாடகாவில் உள்ள அணைகள் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ஆய்வுகளை முடித்துக்கொண்ட உயர்நிலைக் குழுவினரை, சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையிலான அதிகாரிகள் ஓசூரில் இருந்து சேலத்துக்கு கார் மூலம் நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்தனர்.

சேலத்தில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ஜி.எஸ்.ஜா குழுவினரை, நேற்று காலை தமிழக சிறு பாலங்கள் மற்றும் பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்தியகோபால், வேளாண் உற்பத்தி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்துறை இயக்குநர் தட்சணாமூர்த்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் ஆகியோர் சந்தித்து, தமிழக காவிரி பாசன மாவட்டங்களின் நிலை குறித்து விவரித்தனர்.

காவிரி நீர் கிடைக்காமல் பல லட்சம் ஏக்கரில் விதைக்கப்பட்ட நெல் விதைகள் முளைக்காமல் கருகும் நிலையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேட்டூர் அணை மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களின் நிலை குறித்து ‘பவர் பாயின்ட் பிரசன்டேஷன்’ மூலம் குழுவிடம் எடுத்துரைத்தனர். இதைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் உள்ள நீர்மட்டத்தை அளவிடும் பகுதிக்குச் சென்று, அணையின் நீர் இருப்பை குழுவினர் அளவீடு செய்தனர்.

இதன் பின்னர் மத்திய நீர் ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஜா, நிருபர்களிடம் கூறும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகாவில் அணைகள், பாசன நிலங்களில் ஆய்வை முடித்துக்கொண்டு தமிழகம் வந்துள்ளோம். தமிழக அதிகாரிகள் தமிழகத்தின் நிலை குறித்தத் தகவல்களை கொடுத்துள்ளனர். தமிழகத்தில் அணைகளின் நீர் இருப்பு, காவிரி பாசன விளைநிலங்களின் உண்மை நிலவரம் குறித்த தகவல்களை சேகரிப்போம். இந்தத் தகவல்களை அறிக்கையாக தயாரித்து வரும் 17-ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். அதுவரை ஆய்வு குறித்து எந்தத் தகவல்களையும் வெளியிட முடியாது” என்றார்.

பவானிசாகரில் ஆய்வு

ஆய்வை முடித்த குழுவினர் மேட்டூர் அணையில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு சென்றனர். அவர்களை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் வரவேற்றார். பின்னர் குழுவினர், பவானிசாகர் அணையில் நீர் இருப்பு, நீர் வரத்துக்கான ஆதாரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பவானிசாகர் அணையின் நீர் ஆதாரங்கள், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் காலங்கள், வரத்து குறையும் காலங்கள், நீர் திறப்பு விவரம், பாசனப் பகுதிகள் விவரம் உள்ளிட்ட தகவல்களை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மத்தியக் குழுவிடம் அளித்தனர்.

தொடர்ந்து கோபிசெட்டிப் பாளையம் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பேசி, அவர்களின் கருத்துகளை குழுவினர் பதிவு செய்தனர். மேலும் தடப்பள்ளி- அரக்கன்கோட்டை கால்வாய் பாசன விவசாயிகளையும் சந்தித்தனர். காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் குழுவினர் இன்று ஆய்வு நடத்த உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x