Published : 19 Aug 2022 09:15 AM
Last Updated : 19 Aug 2022 09:15 AM

“3 முறை நேதாஜியை நேரில் சந்தித்துள்ளேன்” - தருமபுரி சிவகாமியம்மாள் அனுபவப் பகிர்வு

தருமபுரி அடுத்த அன்ன சாகரத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய தியாகி சிவகாமியம்மாள்

இந்திய சுதந்திர போராட்டத்தின்போது நேதாஜி படைப்பிரிவின் கீழ் கலை வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்திய 90 வயது மூதாட்டி நேதாஜி நினைவு நாளில் அஞ்சலி செலுத்தினார்.

தருமபுரி அடுத்த அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமியம்மாள் (90). ஏழை நெசவாளர்களான மாரிமுத்து-சின்னத்தாய் தம்பதியரின் மகள் சிவகாமியம்மாள் ஒன்றரை வயது குழந்தையாக இருந்தபோதே 1934-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பினாங்குக்கு ரப்பர் தோட்ட பணிக்கு சென்றுள்ளனர். பின்னர் கோலாலம்பூரில் இருந்தபோது காடுகளை அழித்து சாலை அமைக்கும் பணிக்காக இரவில் பிரிட்டிஷ் ராணுவம் ஆண்களை மட்டும் கட்டாயப்படுத்தி இழுத்து சென்று விடுவார்களாம். அப்போது அங்கிருந்து சிவகாமியம்மாளின் பெற்றோர் கோலாலம்பூரில் ‘இந்தியன் இண்டிபென்டட் லீக்’ முகாமில் சேர்ந்துள்ளனர்.

பின்னர், 10 வயது சிறுமியாக இருந்த சிவகாமியம்மாள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான பாலசேனா என்ற படைப்பிரிவுக்கு தலைமையேற்று அணிவகுப்பை நடத்தியுள்ளார். மேலும், பாலசேனா படைப்பிரிவின் கீழ் நாடகங்கள் மூலம் கலை வடிவில் தொடர்ந்து சுதந்திர விழிப்புணர்வை சிவகாமியம்மாள் ஏற்படுத்தி வந்துள்ளார்.

நேதாஜியிடம் சிவகாமியம்மாள் பாராட்டு பெற்ற புகைப்படம்

இவரது நாடக கருத்து களால் ஈர்க்கப்பட்டு இளையோர் பலர் அப்போது இந்திய ராணுவத்தில் இணைந்துள்ளனர். பெண்கள் அதிக அளவில் ராணுவத்தில் சேர காரணமாக இருந்ததற்காக நேதாஜியிடம் சிவகாமியம்மாள் பாராட்டு பெற்றார்.

தற்போது, தியாகிகளுக்கான ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு தருமபுரி அன்னசாகரம் பகுதியில் வசித்து வரும் சிவகாமியம்மாள் ஆண்டுதோறும் நேதாஜியின் நினைவு நாளில் அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தி வருகிறார். 1947-ல் சிவகாமியம்மாள் குடும்பம் இந்தியா திரும்பியது. பின்னர், அவருக்கு மணமானது. ஆனால், ஒன்றரை ஆண்டில் கணவர் உயிரிழந்து விட அதன் பின்னர் மறுமணம் செய்து கொள்ளவில்லை.

நேதாஜி நினைவு நாளான நேற்று அவரது படத்துக்கு சிவகாமியம்மாள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அவரிடம் பேசியபோது, ‘இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றே தீர வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்ட நேதாஜியின் படைப்பிரிவின் கீழ் பாலசேனா பிரிவில் ஏராளமான விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினோம். 3 முறை நேதாஜியை நேரில் சந்தித்துள்ளேன். ஒருமுறை என் நடிப்பை பார்த்து மிகவும் பாராட்டினார்.

மேலும், பர்மாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அன்றைய சூழலால் என்னால் அவர் அழைப்பை ஏற்று செல்ல முடியவில்லை. பலரின் தியாகங்களால் நம் நாட்டுக்குக் கிடைத்த சுதந்திரத்தை என்றென்றும் போற்றுவோம்’ என்று பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x