Published : 19 Aug 2022 12:36 PM
Last Updated : 19 Aug 2022 12:36 PM

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்: கல்வியாளர்கள் கோரிக்கை

சென்னை: "கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிப்பதற்கு ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் தாமதப்போக்கும், மெத்தனப்போக்கும் விசாரணையைப் பாதிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு கல்வியாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

பேராசிரியர்கள் வே.வசந்தி தேவி, அ.மார்க்ஸ், கே.ஏ.மணிக்குமார், கல்விமணி, ப.சிவக்குமார், வீ.அரசு, ஆர்.முரளி, கே. இராஜூ, அ.கருணானந்தம், பி.ராஜமாணிக்கம், சரஸ்வதி கோவிந்தராஜ், எஸ்.கோச்சடை, மு.திருமாவளவன், பி.ரத்தினசபாபதி, க. கணேசன், சி.லட்சுமணன், கே.கதிரவன் மற்றும் எஸ். உமாமகேஸ்வரி, மருத்துவர் சீ.ச.ரெக்ஸ் சற்குணம், முனைவர் முருகையன் பக்கிரிசாமி, ஐ.பி.கனகசுந்தரம் (ஐபிகே) மற்றும் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் எழுதியுள்ள அந்தக் கடிதத்தின் விவரம்:

"குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பலவிதமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள கல்வியாளர்களும், கல்விச் செயல்பாட்டாளர்களுமாகிய நாங்கள், நமது மாநிலத்தில் பல்வேறு பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளின் தொடர்ச்சியான அதிர்ச்சி மரணங்களைக் கண்டு மிகவும் மன வேதனையடைந்து கீழ்க்கண்ட வேண்டுகோளை தமிழ்நாடு அரசின் மேலான கவனத்திற்கும் நடவடிக்கைக்கும் முன் வைக்க விரும்புகிறோம்.

பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து குழந்தைகளின் நலனை உறுதிசெய்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, பள்ளிக் கல்வித் துறைக்கும் சமூக நலத்துறைக்கும் அதி முக்கியமான பொறுப்பு இருக்கிறது. இந்த இரண்டு துறைகளுக்குமிடையே ஒருங்கிணைப்பு இல்லையென்பதை நாங்கள் உணர்கிறோம். அதனால்தான் குழந்தைகளின் குறைந்தபட்ச கண்ணியத்துடன் கல்வியறிவு மற்றும் எண்ணறிவுத் திறனை அடைவதை உறுதிப்படுத்தவதில் பள்ளியின் ஒட்டுமொத்த செயல்பாடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கல்வியைச் சந்தையின் நுகர்வுப் பொருளாக மதிப்பிடும் போக்கானது குழந்தைகளுக்குப் பலவிதமான தீங்குகளை உருவாக்குகிறது. சம்பந்தப்பட்ட குழந்தை உரிமை முகமையின் எந்த விதமான கண்காணிப்பும் இல்லாத காரணத்தால், தனியார் கல்வி நிறுவனங்கள் சுயநல நோக்கில் முழுச் சுதந்திரத்தையும் அனுபவிக்கின்றன. இந்தப் போக்கின் விளைவாகப் பல கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் அதிர்ச்சி மரணங்கள் நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தில் நிகழ்கின்ற பாலியல் துன்புறுத்தல், பள்ளி நிருவாகத்திற்குப் பொறுப்பாக்கப்படாமல், தனி நபர்களின் விவகாரமாகவே நடத்தப்படுகிறது. நிர்வாகத்தோடு தொடர்புடைய நபர்களால் நிறுவனத்தில் குழந்தையின்மீது செய்யப்படும் எந்த விதமான குற்றமும் நிறுவனக் குற்றமாகும். பள்ளிக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பையும், நல்வாழ்வையும் உறுதிப்படுத்திட, பள்ளிகளைக் கண்காணிப்பதற்கும், ஒழங்குபடுத்துவதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் 2022 ஜூலை 13 ஆம் தேதி நிகழ்ந்த பெண் குழந்தையின் மரணம், பள்ளிக் கல்வித்துறையாலும், காவல்துறையாலும் எவ்விதமான சமூகப் பொறுப்புணர்வுமின்றி , மிகச் சாதாரணமான முறையில் கையாளப்படுகிறது. தேசியக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் நேரில் சென்று விசாரித்ததைத் தொடர்ந்து மாநிலக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் நேரில் சென்று விசாரித்ததைத் தவிர, சமூகநலத்துறையின்கீழ் இருக்கின்ற எந்த முகமையும் பிரச்னைக்குரிய பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தவில்லை.

பள்ளி நிர்வாகம் நடைபெற்ற நிகழ்வுகள்பற்றி கூறியதைக் கூர்மையாக ஆய்வு செய்யும்போது, அந்தப் பள்ளிக் குழந்தையின் உயிரிழப்பில் பலத்த சந்தேகம் எழுகிறது. குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. கட்டடத்தின் மேல்தளத்திலிருந்து மாணவி விழுந்தார் என விளக்கம் கொடுத்ததானது, மரணத்திற்குக் காரணமான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சக்திகளை மூடி மறைத்து, அவர்களைப் பாதுகாக்க உருவாக்கிய கதையாகத்தான் தெரிகிறது.

வழக்கு விசாரணையில் இருப்பதால், விசாரணை முடியும் வரை சிறப்பு அதிகாரியை நியமனம் செய்து அப்பள்ளியை அரசு நிர்வகிக்க வேண்டுமென நாங்கள் தமிழக அரசிடம் வேண்டிக்கொள்கிறோம். பள்ளியை நிர்வகிப்பதற்கு ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் தாமதப்போக்கும், மெத்தனப்போக்கும் விசாரணையைப் பாதிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தமிழக அரசுப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் குழந்தைகள் நலன்கருதி தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x