Published : 19 Aug 2022 11:54 AM
Last Updated : 19 Aug 2022 11:54 AM

சென்னை தினம் | பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் - மாநகராட்சி அழைப்பு

சென்னை : சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் - எலியட்ஸ் கடற்கரை சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

“நம்ம சென்னை, நம்ம பெருமை” என்ற பெயரில் சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை சாலையில் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை 383 ஆண்டுகளில் சென்னை மாநகரமாக பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் நாள் மெட்ராசாக உருவான நம்முடைய சென்னையை கொண்டாடும் வகையில், சென்னை மாநகராட்சியின் சார்பில் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து "சென்னை தினத்தை" பெசன்ட் நகர், எலியட்ஸ் சாலையில் மாலை 3:30 மணி முதல் இரவு 11:30 வரை பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவையும், உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோவிட் தடுப்பூசி முகாம்கள் மற்றும் இயற்கை உர விற்பனைக்கான கடைகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த பிரம்மாண்ட கொண்டாட்டத்துடன் இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகளை இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து சென்னை மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கைபேசிகளில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்களில் "செல்ஃபி பூத்"கள் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 21ம் தேதி சென்னையில் பல இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியின் சென்னைப் பள்ளிகளில் ஓவியப் போட்டி, புகைப்படப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இந்தத் தினத்தை கொண்டாட பிரத்யேகமாக பாடல் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.

சிங்கார சென்னையாக வளர்ந்து இன்று பிரமாண்ட பரிமாணத்தில் பல பகுதிகளை சார்ந்த மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி, எல்லோருடைய மனதிலும் ஒரு உணர்வுபூர்வமான இடத்தை அடைந்திருக்கும் நம் சென்னையை கொண்டாட “நம்ம சென்னை, நம்ம பெருமை” என்ற உணர்வுடன் பொதுமக்கள் அனைவரும் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெறும் சென்னை தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x