

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக கொட்டித்தீர்த்த அதி கனமழையால் மாவட்டத்தில் பல இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.
அதிகபட்சமாக நடுவட்டம் மற்றும் கூடலூர் பகுதியில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக உதகையில் இருந்து கூடலூர் வழியாக கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தெய்வமலை பகுதியில் சுமார் 80 மீட்டர் தூரம் பூமிக்குள் உள்வாங்கியது.
இதேபோன்று நடு கூடலூர் பகுதியில் 20 வீடுகளில் மிகப் பெரிய பிளவு ஏற்பட்டு எட்டு வீடுகள் பூமிக்குள் மெதுவாக புதையுண்டு வருகின்றன. இதனால் இந்த வீடுகளில் வசித்த மக்கள் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது.
இப்பகுதியை இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு நிறுவன முதன்மை விஞ்ஞானி எஸ்.மணிவண்ணன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆய்வாளர் லோகநாதன் மற்றும் வருவாய்த் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக விஞ்ஞானி எஸ்.மணிவண்ணன் கூறும்போது, ‘‘அதி கனமழை பெய்தபோது பூமிக்குள் அதிக அளவு மழை நீர் சென்று இருப்பதால் பூமியின் அடியில் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் உள்வாங்குவது, வீடுகளில் விரிசல் ஏற்படுவது போன்றவை நிகழ்ந்துள்ளன.
நிலச்சரிவு ஏற்படுவதற்கு முதல் கட்டம்தான் இந்த அறிகுறி. இருப்பினும் புவியியல் வல்லுநர்கள் அடுத்த கட்ட ஆய்வு மேற்கொண்ட பிறகு எதனால் பூமி உள்வாங்கியது என்பது தெரியவரும்’’ என்றார்.
சம்பந்தப்பட்ட பகுதிகளை வருவாய்த் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.