

ஆனைகட்டி அருகே உடல்மெலிந்து காணப்படும் யானையை பிடித்து சிகிச்சை அளிக்க தயார்நிலையில் 2 கும்கி யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கோவை பெரியநாயக்கன் பாளையம் வனச்சரக பணியாளர் கள் கேரள-தமிழக எல்லையான ஆனைகட்டி, கொடுந்துறைப் பள்ளம் ஆற்றங்கரையில் ஆண் யானையை 3 நாட்களுக்கு முன் பார்த்தனர். அப்போது அந்த யானை உடல் நலம் குன்றியிருந்ததால், அதனை பிடித்து சிகிச்சை அளிக்க வனப் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆனைகட்டி, ஊக்கையனூர் பூளப்பதி பழங்குடியின கிராமம் அருகே நேற்று அந்த யானை தென்பட்டது. வனத்துறையினர் கூறும்போது, “யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மலைச்சரிவில் இருந்து இறங்கி, சமதள பகுதிக்கு யானை வந்தால் மட்டுமே அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும்.
எனவே, 3 கால்நடை மருத்துவர்களும் அங்கேயே முகாமிட்டுள்ளனர். உதவிக்காக டாப்சிலிப்பில் இருந்து கலீம், அரிசி ராஜா என்கிற முத்து ஆகிய 2 கும்கி யானைகள் தயார் நிலையில் உள்ளன. சரிவான பகுதியிலேயே அந்த யானை தினமும் 7 முதல் 8 கி.மீ தூரம் வரை நடக்கிறது. குறைவான அளவு உணவு உட்கொள்வதால் உடல் மெலிந்து காணப்படுகிறது. யானையின் உடலில் வெளிக்காயங்கள் ஏதும் இல்லை”என்றனர்.