

அரக்காடு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியிருப்பதால் கூண்டு வைத்துபிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேனாடுகம்பை அரக்காடு பகுதியிலுள்ள தனியார் தேயிலை தோட்டத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த கிஷாந்த் என்பவர் குடும்பத்துடன் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வாரத்துக்கு முன் சிறுத்தை தாக்கியதில், கிஷாந்தின் மகள் சரிதா (4) உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, அரக்காடு பகுதியில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். கடந்த மூன்று நாட்களாக சிறுத்தை வந்து சென்றது கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக உதவி வனப்பாதுகாவலர் சரவணன் கூறும்போது, "அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை உலா வந்ததுபதிவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கப்படும்" என்றார்.