

சிவகங்கை அருகே காளமேக்கி கிராமத்தில் உச்ச நீதிமன்றத் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற மதுரை, தேனி, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 35 பேரை சிவகங்கை தாலுகா போலீஸார் நேற்று கைது செய்தனர். 6 காளை மாடுகள், 19 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், சிவகங்கை அருகே காளமேக்கி கிராமத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த காளைகளை வளர்ப்போர் சிலர் முடிவெடுத்தனர்.
அதன்படி, மதுரை, திண்டுக்கல், திருச்சி மாவட் டங்களைச் சேர்ந்த சிலர், காளைகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு காளமேக்கி கிராமத்துக்கு வந்தனர். ஜல்லிக்கட்டை காண்பதற்கு இளைஞர்கள் பலரும் இருசக்கர வாகனங்களில் வந்திருந்தனர்.
இதனை அறிந்த சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீஸார், காளமேக்கி சென்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக மதுரை, தேனி, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 35 பேரை கைது செய்தனர். மேலும், 6 காளை மாடுகளையும், அதனை ஏற்றிக்கொண்டு வந்த வாகனங்களையும், 19 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.