Published : 19 Aug 2022 06:12 AM
Last Updated : 19 Aug 2022 06:12 AM

எனது பெயரில் பரப்பப்படும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை

சென்னை: சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி ஏமாற்றுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில்கூட ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள், ஊழியர்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள், பணியாளர்கள் பெயரில் சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படத்துடன் முகநூல் (ஃபேஸ்புக்) கணக்கை கும்பல் ஒன்று தொடங்கியது.

இதேபோல், வாட்ஸ்-அப்பிலும் அதிகாரிகளின் புகைப்படத்தை டி.பி.யாக வைத்து பணம் பறிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்த நூதன மோசடி குறித்து வழக்குப் பதிந்த சைபர் க்ரைம் போலீஸார் ராஜஸ்தானைச் சேர்ந்த சில இளைஞர்களை, அங்கு சென்று கைது செய்தனர். இருப்பினும், இதுபோன்ற மோசடிகள் தற்போதும் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழக டிஜிபி பெயரிலேயே ஏமாற்று வேலை நடந்திருப்பது போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஜிபி சைலேந்திரபாபு பெயரை பயன்படுத்தி, அமேசான் அன்பளிப்பு கூப்பன்களை கேட்டு சிலரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு மர்ம நபர்களிடம் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைக் கேள்விப்பட்டவுடன் உடனடியாக சுற்றறிக்கை ஒன்றைடிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ளார்.

அதில், “காவல்துறை தலைமை இயக்குநர் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, போலி நபர்கள் அமேசான் அன்பளிப்பு கூப்பன்கள் வாங்கி அனுப்பும்படி வாட்ஸ்-அப், எஸ்எம்எஸ் குறுஞ்செய்தி அனுப்புவதாகத் தெரிய வருகிறது. இந்த போலியான குறுஞ்செய்தியை யாரும் பொருட்படுத்த வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவையும் டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x