Published : 19 Aug 2022 06:10 AM
Last Updated : 19 Aug 2022 06:10 AM
சென்னை: வடசென்னைக்கு மட்டுமின்றி, ரயில்வேக்கும் முக்கியத் திட்டமான யானைக்கவுனி மேம்பாலப் பணிகளை விரைந்துமுடிக்க ரயில்வே நிர்வாகம் தீவிரமாகசெயல்பட்டு வருகிறது தற்போதுவரை 65 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிமீ தொலைவில் பழமையான யானைக்கவுனி பாலம் அமைந்துள்ளது. வலதுபுறம் பேசின்பாலம் பணிமனை, இடதுபுறம் சால்ட் கோட்ரஸ் சரக்கு பணிமனை ஆகியவற்றை இணைக்கும் விதமாக, சென்ட்ரல் பணிமனையின் வெளியே செல்லும் பகுதியில் இந்தப் பாலம் உள்ளது.
பழமையான இந்தப் பாலம் மிகவும் பழுதடைந்திருந்ததால், கனரக மற்றும் இலகுரகவாகனங்கள் செல்வதற்கு தடைவிதித்து, 2016-ம் ஆண்டு மூடப்பட்டது.இதனால், அந்தப் பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு இப்பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்ட, ரயில்வே வாரியம்ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, இப்பாலம் இடிக்கப்பட்டு,புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. முன்பு, இப்பாலத்தில் 50 மீட்டர்நீளமுள்ள பகுதி ரயில்வே துறையால்பராமரிக்கப்பட்டு வந்தது.
தற்போது, இந்தப் பகுதியை இடித்துவிட்டு 156 மீட்டர் அளவுக்கு ரயில்வே துறையின் மூலம் பாலம் அமைக்கப்படுகிறது. பாலத்தின் இருபுறமும் 364 மீட்டர் அளவுக்கு சாய்தள சாலை மாநகராட்சியால் அமைக்கப்படுகிறது.இதன்படி, வால்டாக்ஸ் சாலை நோக்கி165.24 மீட்டர், ராஜா முத்தையா சாலையை நோக்கி 198.99 மீட்டர் நீளத்துக்கு சாலை அமைக்க, மாநகராட்சிசார்பில் ரூ.30 கோடியே 78 லட்சம் நிதி ஒதுக்கி, சாலை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ரயில்வேயும், மாநகராட்சியும் இணைந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இது, வடசென்னைக்கு முக்கியத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. மின்ட் பகுதியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை விரைவாக அடைய மிக முக்கியப் பாதையாக இருக்கிறது. எனவே, திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ரயில்வே தரப்பில் பாலப்பணிகள் முடிந்தால், கூடுதல் ரயில்களை இயக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: யானைக்கவுனி பாலத்தை அமைக்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ரயில்வே தரப்பில், ரூ.43.77 கோடி செலவில் யானைக்கவுனி மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தூண்கள் முழுமையாக அமைக்கப்பட்டு, அடுத்த கட்டமாக பாலத்தின் மேற்பகுதிகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.குறிப்பாக, மேம்பால வளைவுகள் பொருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. தற்போதைய நிலவரப்படி,65 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT