Published : 19 Aug 2022 06:07 AM
Last Updated : 19 Aug 2022 06:07 AM

9 மாவட்ட மணல் லாரிகள் வேலைநிறுத்தம்: கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்

மணல் லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதை தமிழக அரசு தடுக்க வலியுறுத்தி, மணல் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் யுவராஜ் தலைமையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று நடைபெற்றது. படம்: ம.பிரபு

சென்னை: சென்னை, அதனைச் சுற்றியுள்ள 9 மாவட்ட மணல் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நேற்று முதல் தொடங்கியுள்ளது.

இதையொட்டிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று நடந்தது.

இதில் அனைத்து எம்-சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 4.50 லட்சம் கனரக வாகனங்களில் 2 லட்சம் வாகனங்களில் அதிக பாரம் ஏற்ற அனுமதித்து, அவர்களிடம் லஞ்சம் பெறப்படுகிறது. இதனால் சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்கின்றன. நாங்களே அதிக பாரம் ஏற்க மறுத்தாலும், அரசு அதிகாரிகள் அதை விரும்புவதில்லை.

ரிப்லெக்டிவ் ஸ்டிக்கரை பொருத்தவரை மத்திய அரசு 11 நிறுவனங்களுக்கு அனுமதியளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு 2 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே பெற வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து ஆணையருக்கு இடையே உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும். திருவேற்காடு, பூந்தமல்லி, தாம்பரம் என பல்வேறுவட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அதிக விலைக்கு ஸ்டிக்கர்கள் விற்கப்படுவதாக புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

4 ஆயிரம் எம்-சாண்ட் கிரசர்களில் சுமார் 100 கிரசர்கள் மட்டுமே அனுமதியுடன் இயங்குகின்றன. இதை முறைப்படுத்த இணையவழி ரசீது முறையை கொண்டு வர வேண்டும்.

எங்களது கோரிக்கை அனைத்தும் அரசின் வருவாயை நிச்சயம் அதிகரிக்க வழி வகுக்கும். இதில் முதல்வர் தலையிட்டு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.தற்போது சென்னை, அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் என 9 மாவட்டங்களில் உள்ள 20 ஆயிரம் மணல் லாரிகள் இயங்கவில்லை. போக்குவரத்துத் துறை தொடர்ந்து அலட்சியாக இருக்கும் நிலையில், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆதரவையும் கேட்டு, பெரிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x