Published : 19 Aug 2022 04:50 AM
Last Updated : 19 Aug 2022 04:50 AM

சேலம் | கிராமங்கள் சுற்றுச்சூழல் தூய்மையடைய ‘நம்ம ஊரு சூப்பரு’ இயக்கம் தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'நம்ம ஊரு சூப்பரு’ என்னும் இயக்கம் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று நடந்தது.

சேலம்

சுற்றுச்சூழல் தூய்மையை கிராமங்கள் அடையவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற இயக்கம் சார்பில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பிரச்சாரங்கள், செயல்பாடுகள் நடைபெற உள்ளன, என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

கிராமங்களில், மக்களிடையே சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ‘நம்ம ஊரு சூப்பரு’ என்னும் சிறப்பு இயக்கம் தொடங்குவது குறித்து அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார்.

கூட்டம் குறித்து ஆட்சியர் கூறியதாவது:

பொதுமக்கள் ஒவ்வொருவரும் திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சுற்றுச்சூழல் தூய்மையை கிராமங்கள் அடையவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற இயக்கம் கிராமப்புற மக்களிடையே தொடங்கப்படுகிறது.

இந்த இயக்கம் சார்பில் சேலம் மாவட்டத்தில் நாளை (20-ம் தேதி) முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை பல்வேறு பிரச்சாரங்கள், செயல்பாடுகள் நடைபெற உள்ளன.

கிராமப்புறமக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிறப்பு இயக்கத்தின் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக மேற்கொண்டு சுகாதாரம் காக்கவும், மக்கும் குப்பையில் இயற்கை உரம் தயாரிக்கவும், தடுப்பணை, பண்ணைக்குட்டை உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தமிழரசி, துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) நளினி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x